பொன்னாலைச் சந்தியில் உள்ள வீதித் தடைகளை அகற்றுங்கள்..! வலி.மேற்கு பிரதேச சபையில் கோரிக்கை..

ஆசிரியர் - Editor
பொன்னாலைச் சந்தியில் உள்ள வீதித் தடைகளை அகற்றுங்கள்..! வலி.மேற்கு பிரதேச சபையில் கோரிக்கை..

பொன்னாலைச் சந்தியில் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றி பொதுமக்களின் சுமுகமான போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா சபையில் கேட்டுக்கொண்டார்.

வலி.மேற்கு பிரதேச சபையின் சாதாரண பொதுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு வெடிப்புக்குக்கு பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக எனக் கூறி 

வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதன்போது பொன்னாலைச் சந்தியில் காரைநகருக்குச் செல்லும் வீதியில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன. தற்போது, ஆனையிறவு, பூநகரி உட்பட பிரதான வீதிகளில் 

கூட சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் அகற்றப்பட்ட நிலையில், பொன்னாலைச் சந்தியில் மட்டும் வீதித் தடைகள் அகற்றப்படவில்லை. இதனால் வாகனங்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றன எனவும் 

விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன எனவும் பொன்ராசா சுட்டிக்காட்டினார். இவ்விடயம் தொடர்பாக தவிசாளர் த.நடனேந்திரன் உடனடியாகவே காரைநகர் கடற்படை அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக 

உரையாடி இவ்விடயத்தை அவரது கவனத்திற்கு கொண்டுவந்தார். உரிய வகையில் கடிதம் ஒன்றை அனுப்புமாறும் அதன் பின்னர் தாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார் என தவிசாளர் கூறினார்.

Radio