அமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இதன் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்றது. இறுதியில் அதில் அமீர் கான் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டபோது, அமீர்கானுடன் சேர்ந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்தார் விஜய் சேதுபதி. ஆனால், என்ன படம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
தற்போது ‘பாரஸ் கம்ப்’ இந்தி ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தில் தான் அமீர் கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தில், பப்பா என்ற கதாபாத்திரத்தில் மைகெல்டி வில்லியம்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். கம்ப் கதாபாத்திரம் ராணுவத்தில் இருக்கும் போது அவரது நண்பனாக இவர் தோன்றுவார். அவர் இறந்த பின், கம்ப் தனது வியாபாரத்தின் லாபத்தை பப்பாவின் அம்மாவுக்குத் தருவார்.
இந்தி ரீமேக்கில் இந்த பப்பா கதாபாத்திரம் தமிழராக சித்தரிக்கப்படவுள்ளதாகவும், இதில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில்பெரும் வரவேற்பைப் பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.