7-வது முறையாக நயன்தாரா படம் தள்ளிவைப்பு
தென்னிந்திய பட உலகில் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல். ஏற்கனவே நயன்தாராவை முதன்மைபடுத்தி வந்த மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள் வசூல் குவித்தன.
இதுபோல் கொலையுதிர் காலம் படமும் நயன்தாராவை மையப்படுத்தி தயாரானது. நயன்தாராவின் முந்தைய படங்களைபோல் கொலையுதிர் காலம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ஜனவரியில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியானதால் பிப்ரவரிக்கு தள்ளிவைத்தனர். அதன்பிறகு படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் ரிலீஸ் மே மாதத்துக்கு தள்ளிப்போனது.
பிறகு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு வழக்கு விசாரணைகள் முடிந்து ஜூலை 26-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வரவில்லை. ஆகஸ்டு 1-ந் தேதி வெளியாகும் 2-ந் தேதி வெளியாகும் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனால் நேற்றும் படம் திரைக்கு வரவில்லை. 7-வது முறையாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஜோதிகாவின் ஜாக்பாட் படம் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.