தேசிய பிரச்சினையை தீர்க்காவிடின் நாடு உருப்படாது!
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் நாட்டை எந்த விதத்திலும் முன்னேற்ற முடியாது என அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம் என தெரிவித்த அவர் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் முன்னின்று செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறினார்.
கடந்த அரசாங்கங்கள் அனைத்துமே நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்துள்ளன. எனினும் அது நிறைவேற்றப்படவில்லை. எமது அரசாங்கம் எதிர்வரும் புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.
தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை கூறிவருவதாக எதிர்க்கட்சியினரால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாதொழிப்பது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.
எனினும் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று நிறைவேற்று ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டாரே தவிர இல்லாதொழிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதேபோன்று 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒரு மன்னருக்குரிய அதிகாரம் கொண்டதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தவரும் அவரே.
உண்மையில் எமது அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை பெருமளவில் குறைத்துள்ளது. எமது அடுத்த ஜனாதிபதி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
இலங்கையானது பல்வேறு நெருக்கடிகள் மோதல்களுக்கு முகங்கொடுத்துள்ளது. இறுதியில் ஈஸ்டர் தாக்குதலையும் எதிர்கொண்டுள்ளது. அளுத்கம, திகன போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளுக்கான பிரதிபலனாகவே நாம் ஈஸ்டர் தாக்குதலை பார்க்க முடியும். எமது நாட்டில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தரமாக பார்த்ததாலேயே கருப்பு ஜூலை போன்ற வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதுடன் அதுவே நீண்டகால யுத்தத்திற்கும் வழிவகுத்தது.
எமது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அது தொடர்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து இன, மத மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் வந்த எந்த தலைவர்களினாலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. அது எமக்கு பெரும் துரதிஸ்டமாக அமைந்தது. நாட்டில் அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் பிளவுபடாத நாட்டில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சகல மக்களும் சமமாக நடத்தப்படும் அரசியலமைப்பு எமக்கு அவசியமாகிறது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஏற்கனவே சமஷ்டி முறை யோசனையாக முன்வைக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு சமஷ்டி முறை இங்கு யோசனையாக முன்வைக்கப்பட்டது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க போன்றோரும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அவர்களது காலத்தில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.