SuperTopAds

அரசியல் அமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தை மீறியவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்களா? சிவசக்தி ஆனந்தன் கேள்வி

ஆசிரியர் - Admin
அரசியல் அமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தை மீறியவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்களா? சிவசக்தி ஆனந்தன் கேள்வி

அரசியல் அமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தை மீறியவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்களா? என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றதில் கேள்விஎழுப்பியுள்ளார்  இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது  

நல்லாட்சியைக் கொண்டுவந்தவர்களாலேயே இந்த சபையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது மிகவும் வேதனையான விடயம். நூறுநாள் வேலைத்திட்டத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்டமாக புதிய ஜனாதிபதி பதவியேற்ற உடனேயே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கௌரவ ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகவும் நியமித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கட்டிலில் ஏறிய உடன் அவசர அவசரமாக பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பத்தொன்பதாவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் ஊடாக குறைக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரத்தைக் குறைத்து தன்னை ஒரு கனவானாகவும் காட்டிக்கொண்டார். நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கான தைரியமும் கிடைத்தது. 

பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் அமையப்போகும் தேசிய அரசாங்கத்தின் ஊடாக நல்லாட்சி ஏற்படும் என்றும் அது எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவரும் என்றும் கூறியே நாமும் எமது மக்களிடம் ஆணை கோரியிருந்தோம். எமது மக்களும் அதற்கு ஆணை வழங்கியிருந்தனர். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னமும் எமது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டபாடில்லை. ஆனால் அரசாங்கமும் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுவிட்டன.

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரமான வாழ்க்கைக்கு இந்த அரசாங்கத்திலும் வழி ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, அனைத்து இன மக்களுக்கும் அரசியல் அமைப்பிலும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளும்கூட தமிழ் மக்கள் விடயத்தில் மீறப்பட்டுள்ளன.

அரசியல் அமைப்பின் மூன்றாம் அத்தியாயமான அடிப்படை உரிமைகள் குறித்த விதியின் பத்தாவது பிரிவு பிரஜைகள் அனைவரும் மதச் சுதந்திரம், சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் என்பனவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும் என்கிறது.

12.2 இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரஜையும் ஓரங்கட்டப்படுதல் ஆகாது என்கிறது. 14ஆவது பிரிவின் (உ) மற்றும் (ஊ) ஆகிய உப பிரிவுகள் தனியாகவோ அல்லது ஏனையோருடன் சேர்ந்தோ தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும் அனுசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது.

ஆனால், எமது தாயகப் பிரதேசத்தில் எமது வழிபாட்டிடங்களில் திட்டமிட்ட வகையில் எமது மதச் சுதந்திரத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதத்தில், எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களை அவமதிக்கும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த அடையாளத் திணிப்பு எத்தகைய அரசியலமைப்பின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்பதை அரசாங்கம் இந்த சபைக்கு விளக்க வேண்டும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தபோது உங்களை நல்லாட்சி அரசாங்கம் என்று கூறினீர்கள். உங்களது நல்லாட்சியில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறினீர்கள். அது மட்டுமன்றி, யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று எமது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்தப் பிரச்சினைகளும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தில் நான்காண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த நல்லாட்சியைக் கொண்டுவந்தவர்களே நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று ஓலமிடுவது வேதனையளிக்கிறது. அரசியல் சாசனசபையின் வழிகாட்டுதல் குழு எண்பத்தெட்டுக்கும் மேற்பட்ட முறை கூடியிருக்கிறது. இடைக்கால அறிக்கையொன்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கு ஏற்றவகையில் அதனை முழுமைப்படுத்தி சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதை அவர்களின் நடவடிக்கை காட்டுகிறது.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் அவர்கள் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேலும் இரண்டாண்டுகள்  அவகாசம் கேட்டுள்ளார். இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு வரவு-செலவுத் திட்டத்திலும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அதனைப் பாதுகாத்துவந்தது மட்டுமன்றி ஒக்டோபர் 26 அரசியல் சதிப்புரட்சி மூலம் இந்த அரசைக் கவிழ்க்க ஜனாதிபதி முயற்சித்தபோது உயர்நீதிமன்றம் சென்று இந்த அரசாங்கத்தைப் பாதுகாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒத்திவைப்பு பிரேரணையைக் கொண்டுவந்தமையானது நகைப்புக்கிடமாகியிருக்கிறது.

எமது கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்ப் புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் அனைவரும் இந்த அரசு புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவருவதிலிருந்து விலகிச் செல்கிறது. மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப்போகிறார்கள் என்று சொன்னபோதுகூட நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுடன் அரசாங்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்தீர்கள்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்ட முடியாதது மட்டுமல்ல, சாதாரண ஒரு பிரதேச செயலகத்தையே தரம் உயர்த்த முடியவில்லை. காணிகளை விடுவிப்பதற்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் கைதிகள் தமக்கு நியாயம் கோரியும் விடுவிக்கக் கோரியும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்பிற்கினியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக தொடர்ந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இப்பொழுது தமது வழிபாட்டிடங்களைக் காப்பதற்காகவும், தமது மண் பறிபோகாமல் இருப்பதற்காகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களை இந்த அரசாங்கம் புதிய புதிய போராட்டங்களுக்குள் வலிந்து தள்ளுகிறது.

ஆகவே, தேசிய இனப் பிரச்சினைக்கானஆயுதப் போராட்டம் முடிந்து போனாலும்கூட, தமிழ் மக்கள் தமது மண்ணை, நிலத்தை, கலையை, கலாசாரத்தை, வழிபாட்டுரிமையை, தமது வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் தமது நியாயங்களை நிலைநாட்டுவதற்காகவும் ஜனநாயகவழியில் தொடர்ந்தும் போராட்டக்களத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை.

அடுத்த சில மாதங்களில் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்த முகத்தோடு நீங்கள் எம்மத்தியில் வாக்கு கேட்டு வரப்போகிறீர்கள்?

ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கியது மாத்திரமல்லாமல், எதிர்க்கட்சியாகவும் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் புதிய அரசியல் சாசனம் வரும் என்ற எதிர்பார்ப்புடன் இவை நடைபெற்றது. ஆனால் எந்த சிங்கள அரசியல் கட்சிகளையும்,சிங்கள அரசியல் தலைவர்களையும் நம்ப முடியாது என்பதையும் கடந்த நான்கு வருட அரசாங்க செயற்பாடுகள் நிரூபித்து விட்டன.

ஆகவே, சர்வதேச சமூகத்தின் தலையீடு இல்லாமல், இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க மாட்டாது என்பதுடன், மூன்றாந்தரப்பின் தலையீடின்றி விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய இனத்திற்கு விடிவு கிட்டாது என்பதையும் இந்த சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.