காஷ்மீர் விவகாரம் குறித்த டிரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி!

ஆசிரியர் - Admin
காஷ்மீர் விவகாரம் குறித்த டிரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி!

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தால், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றார். தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டொனால்டு டிரம்பை இம்ரான் கான் சந்தித்து பேசினார். 

அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய டெனால்ட் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் சுமூக தீர்வை ஏற்படுத்த உதவுமாறு இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

இதுதொடர்பாக மோடியிடம் பேசவிருப்பதாகக் கூறிய அவர், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி கேட்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த பிரச்சினையை இன்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானுடனான நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்படும் என்பது இந்தியாவின் நிலையான நிலைப்பாடாகும். காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடனான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை தலையிடுமாறு பிரதமர் மோடி எப்போதும் கேட்டது இல்லை என கூறினார். எனினும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.