உளவுப் பிரிவு உறுதியான தகவல் வழங்கவில்லை! - நீதிமன்றில் வாதம்
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேசிய உளவுத் துறை ஒரு போதும் உறுதி செய்யப்பட்ட தெளிவான தகவல்களை முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கோ அல்லது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கோ அளித்திருக்கவில்லை என அவர்களது சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்ன கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் நேற்று முன்தினம் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர்.
அவ்விருவர் சார்பிலும் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் வாதங்களை முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தெளிவான உளவுத் தகவல்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உளவுத்துறையால் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெளிவானதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே நீதிமன்றில் தெரிவித்த போதும் அதனை பூஜித் மற்றும் ஹேமசிறியின் சட்டத்தரணி மறுத்தார்.
அத்துடன் தேசிய உளவுத்துறை நேரடியாக ஜனாதிபதிக்கே தகவல்களை அளிப்பதாகவும், அது ஜனாதிபதியின் கீழ் உள்ள துறை எனவும் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் 2015.01.08 ஆம் திகதி வெளியிட்ட 1897/15 எனும் விஷேட வர்த்தமானி பிரதியை மன்றில் சமர்ப்பித்து வாதிட்ட அனுஜ பிரேமரத்ன, கடந்த 2018 ஒக்டோபரின் பின்னர் பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு கூட சேர்க்கப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் அன்றைய தினம் சந்தேக நபர்களின் பிணை மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீர்மானிப்பதாக அறிவித்தார்.