SuperTopAds

பேஸ்புக் பயனா்களுக்கு இது முக்கிய செய்தி..! புதிய கட்டுப்பாடுகள் வருகிறது..

ஆசிரியர் - Editor I
பேஸ்புக் பயனா்களுக்கு இது முக்கிய செய்தி..! புதிய கட்டுப்பாடுகள் வருகிறது..

இலங்கையில் உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலைகளை தொடா்ந்து பேஸ்புக் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பேஸ் நிறுவனத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

இதன்படி, முக நூல் மூலமாக செய்திகளை அனுப்பும் போது, ஒரு தகவலை ஐந்து பேருக்கு மாத்திரமே பகிர முடியும்.

இதேவேளை, வெறுப்புணர்வு சொற்களை கொண்டுள்ள பதிவுகளை அடையாளம் கண்டு தணிக்கை செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் ஈடுபடுத்தியுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளால் நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டிருந்தன.

நாட்டில் வன்முறைகளும், இனவாதக் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தததுடன். பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இணையத்தளங்களின் ஊடாக பரப்பப்படும் இனவாதக் கருத்துக்களையும் வன்முறை சார்ந்த காணொளிகளையும் தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன அரசாங்கத்திடம் உதவிகோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெறுப்புணர்வு கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவுவதன் விளைவாகவே வன்முறைகளும் ஏற்படுவதாக அரசாங்கம் அடிக்கடி தெரிவித்து வந்தது.

இது தொடர்பாக அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.