SuperTopAds

இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

ஆசிரியர் - Admin
இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

எமது மக்கள் கதிரவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத தினமே தைப்பொங்கல் திருநாளாகும். இத்தைப்பொங்கல் திருநாளில் மக்களாகிய உங்களது மனங்கள் தோறும், நீடித்த நிம்மதியை தருகின்ற நிரந்தர மகிச்சியும் பொங்கி வரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

இந்த உறுதியான நம்பிக்கையோடு நாம் அனைவரும் பிறந்துள்ள தைப்பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு வரவேற்போம். நீங்கள் நினைத்தவைகள் யாவும் நிறைவேறவில்லை என்ற ஏமாற்றங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நான் என்றும் உங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பவன். உங்கள் கனவுகள். ஏக்கங்கள், தேவைகள் எவைகள் என்பது எனக்கு நன்றாக தெரியும். வீடற்ற மக்கள் வீதியில் நிற்கிறீர்கள். நிலமிழந்த மக்களும் காணாமல் போன உறவுகளை இழந்து நின்மதியை தொலைத்த மக்களும் நீதி கேட்டு தெருக்களில் நிற்கிறீர்கள்.

சிறைகளில் வாடும் உங்கள் உறவுகளை எண்ணி நீங்கள் ஏக்கத்துடன் வாழ்த்து கொண்டிருக்கிறீர்கள். வேலையற்ற பட்டதாரிகள், இளைஞர் யுவதிகள் யாவரும் நிரந்தர வேலை வாய்ப்பின்றி துயரப்படுகின்றீர்கள். எமது வரலாற்று வாழ்விடங்கள் யாவும் அபிவிருத்தியின்றி விட்ட குறையில் வீழ்ந்து கிடக்கின்றது.

எமது மக்களின் வாழ்வின் மீது பேரவலங்களை சுமத்திய போர்ச்சூழலும், கொடிய வன்முறைகளும் இங்கு ஒழிந்து போனாலும், போரின் வடுக்கள் இன்னமும்முழுமையாக தீர்ந்து போகவில்லை.

இத்தகைய நீடித்த துயரங்களின் மத்தியில் உங்கள் மனங்கள் வாடியிருப்பது எமக்கு ஆழ்ந்த துயரத்தை தருகின்றது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது போல் இம்முறை பிறந்து வரும் தைப்பொங்கல் திருநாளோடு உங்கள் வாழ்வில் புதியதொரு மாறத்தை நீங்களாகவே உருவாக்கவல்ல வாய்ப்பொன்றும் உங்களை தேடி வருகின்றது.

வீணையைப்பற்றிப்பிடித்து நம்பிக்கையுடன் மீட்டுங்கள். அது உங்களது எதிர்காலத்தை நிச்சயம் ஒளிபெறச் செய்யும்.

மாற்றங்களை உருவாக்க முடியாத தொன்று தொட்ட பழைய அரசியல் வழிபாடுகளை முழுமையாக கைவிட்டு எழுந்து வாருங்கள்.

இந்த உறுதியும், நம்பிக்கையும், உங்களுக்கான உண்மையுள்ள வழிகாட்டலுமே எமது வரலாற்று வாழ்விடங்களில் மாற்றங்களை உருவாக்கும்.

இருள் அகன்று எங்கும் நிரந்த ஒளி தோன்றட்டும். அனைத்து மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்!

அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.