கண்ணாடி புத்தகப் பை கொண்டு செல்லாததால் நடு வீதிக்கு வந்த யாழ். மாணவன்!

பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப் பையைக் கொண்டு செல்லாத மாணவனை பாடசாலையில் இருந்து விலகும் பத்திரத்தை கொடுத்து, வெளியேற்றியுள்ளார் பாடசாலை அதிபர். யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவனுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார். பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், மாணவனின் பாடசாலை பையை பரிசோதனை செய்யும்போது, கண்ணாடி பையை கொண்டு வரத்தெரியாதா என கேட்டு மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை வீசியுள்ளனர்.
இது குறித்து, மாணவனின் தந்தை பாடசாலைக்கு உள்ளே செல்ல முடியாமையினால், சாரணர் இயக்கத்திற்குப் பொறுப்பானவருடன் சம்பவம் தொடர்பாக கதைத்துள்ளார். மாணவனின் குடும்ப சூழ்நிலையை புரிந்துகொள்ளாத பாடசாலை நிர்வாகத்தினர், மாணவனின் தந்தையுடன் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
மிகவும் வறிய குடும்ப சூழலால் தனது பிள்ளையின் கல்வியை கருத்திற்கொண்டு மாணவனின் தாயார் பாடசாலைக்குச் சென்று அதிபருடன் கதைத்துள்ளார். அத்துடன், கண்ணாடிப் பையை கொண்டு வர வேண்டுமென்றால், மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு வேதனையுடன் தாயார் கேட்டபோது, அதிபர் வேறு ஒரு ஆசிரியர் ஊடாக மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார். இவ்வாறு பாடசாலை அதிபர் நடந்து கொண்டமையினால், மாணவனின் கற்றல் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.