யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

ஆசிரியர் - Admin
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் அரச தரப்பு சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தர் முன்வைத்த சாட்சிப் பிரதி சிங்கள மொழியில் மாத்திரம் காணப்பட்டதால் அதன் தமிழ்மொழி பெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட சரத் பண்டார திசாநாயக்க மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபரான சாமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் இன்று மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

வழக்குத்தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையாகியிருந்ததுடன், வழக்குத் தொடுநர் தரப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். பொலிஸாரின் பதிவுப் புத்தகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிரதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்தப் பிரதி தனிச் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், அதன் தமிழ் மொழிபெயர்ப்பை மன்றில் சமர்ப்பி க்குமாறு உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், வழக்கை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு