SuperTopAds

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவையொட்டி கவிதை நூல், இறுவெட்டு வெளியீடு

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவையொட்டி கவிதை நூல், இறுவெட்டு வெளியீடு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவையொட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 'நெருப்பில் குளித்த நினைவழியா பத்தாண்டுகள்' கவிதைத் தொகுப்பு மற்றும், 'மரணம் முடிவல்ல' இறுவெட்டு பாகம் 02 என்பன இன்று (17) வெள்ளிக்கிழமை வெளியிட்டுவைக்கப்பட்டன. 

யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று பிற்பகல் 04 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்திவு மாவட்ட அமைப்பாளர் தி.கிந்துஜன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பிரதான சுடரினை மாவீரர் பைந்தமிழின் சகோதரியான சின்னத்துரை ராஜினி ஏற்றிவைத்தார். 

தொடர்ந்து 'நெருப்பில் குளித்த நினைவலையா பத்தாண்டுகள்' கவிதைத் தொகுப்பினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டு வைக்க கவிதைப் போட்டியில் 'யுத்தத்தின் எச்சத்தில் நான்...' என்ற கவிதையை எழுதி முதலிடம் பெற்றவரான திருகோணமலையைச் சேர்ந்த சி.செல்வநாயகம் பெற்றுக்கொண்டார்.

நூலின் வெளியீட்டு உரையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்திபன் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. 

நூலின் ஆய்வுரையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரனும் சிறப்புரையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நிகழ்த்தினர். தொடர்ந்து  'மரணம் முடிவல்ல' பாகம் 02 இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. 

தொடர்ந்து கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 

கவிதைப் போட்டியில் 'யுத்தத்தின் எச்சத்தில் நான்...' என்ற கவிதையை எழுதிய திருகோணமலையைச் சேர்ந்த சி.செல்வநாயகம் முதலாமிடத்தினையும் 'ஊழித்தாண்டவம்' என்ற கவிதையை எழுதிய கிளிநொச்சியைச் சேர்ந்த த.ஜெகதீஸ்வரன் இரண்டாம் இடத்தினையும் 'வலியாறும் விழியோரம்' என்ற கவிதையை எழுதிய மன்னார் வட்டக்கண்டலைச் சேர்ந்த செல்வி ஜெயபிருந்த மோசேஸ் முன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.