சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்திக்கவில்லை - விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கஜன்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்தித்தனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான பொய்க் கருத்தொன்றைக் கூறியிருக்கின்றார் விக்கி.அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம். விக்னேஸ்வரன் ஐயா வயதில் மூத்த ஒருவர். 40 ஆண்டு காலத்துக்கு மேலாக நீதித்துறையில் இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் ஒரு ஆன்மீகவாதி. அவருடைய முகத்தில் திருநீறும் பொட்டும் எப்போதும் இருக்கும்.
ஆகையால் அப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் மனச்சாட்சிக்கு மாறாக பொய் சொல்ல மாட்டார்கள் என்பது தான் மக்களுடைய நம்பிக்கை. அப்படியிருக்கின்ற போது நாங்கள் சீனத் தூதுவரை இரவில் ஒளித்துச் சந்தித்திருக்கிறோம் என்ற சாரப்பட ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அப்படிச் சொல்லியிருப்பது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை.
விக்னேஸ்வரன் தான் கொண்டு செல்கின்ற பிழையான அரசியலை மக்கள் மட்டத்திலே நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிச் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று நான் மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அவரைப் போன்ற சிலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற பாதைக்குள் கொண்டு செல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வியொன்று வலுவாக எழுந்து கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட இடத்தில் தனது அந்தப் போக்கை நியாயப்படுத்தவதற்கு தனக்குப் பக்கத்திலே சரியாகச் செயற்படுகின்ற தரப்பு இருந்தால் அது தனக்கு இடைஞ்சல் என்பதால், எங்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சேறு பூச முற்படுவதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம்.
இந்த பொய்யான பரப்புரைச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அவர் தன்னுடைய அரசியலுக்காக அந்தப் பொய்களைச் சொல்லப் போகின்றார் என்று சொன்னால் தயவு செய்து பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் தவிர்த்து விட்டுச் சாக்கடை அரசியலில் தாராளமாகப் பொய்களைக் கூறிக்கொண்டு அரசியலைச் செய்யட்டும்.
எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம்.எங்களுக்கு யாரைச் சந்திப்பதிலும் எந்தவிதமான தயக்கமும் இல்லை. பயமும் இல்லை. யாரைச் சந்தித்தாலும் அதனை வெளிப்படுத்துவதிலும் எங்களுக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை.
இதுவரை இந்தியத் தூதரகங்களையும் ஐரோப்பியத் தூதரகங்களையும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சீனத் தூதுவர்களைச் சந்திக்கவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் அவர்களும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிச் சந்திக்கக் கேட்டால் நிச்சயமாக நாங்கள் சந்திப்போம். ஆனால், சந்தித்துவிட்டு நாங்கள் அதனை ஒளித்து மறைக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அதனை விக்னேஸ்வரன் ஐயா தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இதுவரை அவரோடு நெருங்கிப் பழகிய அரசியல்வாதிகள் ஐந்து சதத்துக்கும் நேர்மையில்லாத அடிப்படைத் தார்மீக அறமற்றவர்களாக இருக்கலாம்.அவர்களை வைத்துக் கொண்டு நாங்களும் அப்படித்தான் என்ற எண்ணத்தோடு கருத்துக்களைக் கூறுவதை விக்னேஸ்வரன் ஐயா தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.