அரைநாள் கூட தாக்குபிடிக்காத இந்திய அணி… தென் ஆப்ரிக்கா மிரட்டல் வெற்றி !!

ஆசிரியர் - Editor2
அரைநாள் கூட தாக்குபிடிக்காத இந்திய அணி… தென் ஆப்ரிக்கா மிரட்டல் வெற்றி !!

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்ததுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரில் கேப்டவுனில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை(93) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 209 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி ஆல் அவுட்டானது.

இதனையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி வீரர்களில் டிவில்லியர்ஸ்(35), மார்கம்(34), எல்கர்(25) மற்றும் கேசவ் மஹாராஜ்(15) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் 130 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து பரிதாபமாக வெளியேறினர்.

கோஹ்லி, ரோஹித் உள்பட இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதிலும், டைலேண்டர்களான அஸ்வின்(37) மற்றும் புவினேஷ்வர் குமார்(13*) எடுத்து சிறிது நேரம் தாக்குபிடித்து மானம் காத்தனர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த கூட்டணியை பைலண்டர் தனது வேகத்தில் உடைத்து, அஸ்வினை வெளியேற்றவே அடுத்தடுத்து வந்த ஷமி மற்றும் பும்ராஹ் வந்த வேகத்தில் வெளியேறியதால் 135 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.