"நரேந்திர மோதியை கட்டியணைத்தது ஏன்?" - ராகுல்காந்தி ருசிகர பதில்!

ஆசிரியர் - Admin

பிரதமர் நரேந்திர மோதியை கட்டியணைத்தது ஏன்?, புல்வாமா தாக்குதலுக்கு யார் காரணம்?, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது எது? என சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் தொடுத்த சரமாரியான கேள்விகளுக்கு புன்னகையுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்தார். கல்லூரி மாணவிகளுடன் ''சேஞ்ச் மேக்கர்ஸ்'' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாதாரண டி ஷர்ட், ஜீன்ஸ் உடையில் தோன்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகத்துடன் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்தார். 

பல்வேறு கேள்விகளுக்கு பதில் தந்த ராகுலுக்கு இறுதியாக வைக்கப்பட்ட கேள்வியான 'நாடாளுமன்றத்தில் ஏன் மோதியை கட்டியணைத்து கொண்டீர்கள்?'என்று ஒரு மாணவி கேட்டபோது, விரிவான பதிலை வழங்கினார். 'நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும்போது மோதி என்னை, என் தாய், தந்தை, என் பாட்டியை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனம் என அவர் வெறுப்புடன் பேசினார். 

என்னை பொறுத்தவரை 2014 தேர்தலில் நான் தோற்றதால் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு கற்றுக்கொடுத்த நபரை எப்படி என்னால் வெறுக்கமுடியும். அவர் மீதான உண்மையான அன்பால் மட்டுமே நான் அவரை கட்டிபிடித்தேன்,''என பதிலளித்தார் ராகுல். மேலும், '''எல்லா மதங்களும் அன்பைதான் போதிக்கின்றன, அன்புதான் அடிப்படை அன்பு மூலமாகத்தான் கோபத்தை குறைக்கமுடியும். நமக்கு கற்றுக்கொடுப்பவர்களை நாம் வெறுக்கமுடியுமா? அதனால் அவரை அணைத்துக்கொண்டேன். 

நரேந்திர மோதியின் மீது அன்பு செலுத்த நபர்கள் இல்லாததால்தான் அவர் வெறுப்போடு இருக்கிறார்என்று எண்ணுகிறேன். உங்களை தாக்குபவர்கள்தான் உங்களின் ஆசிரியர்கள் என்று நீங்கள் கருதவேண்டும். வெறுப்போடு இருப்பவர்கள் மீது அன்போடு இருங்கள். இதுதான் இந்திய நாட்டின் குணம், குறிப்பாக தமிழ் மக்களின் குணம்,''என்று ராகுல் பதில் சொன்னதும் மாணவிகள் கரகோஷம் எழுப்பினர்.

முன்னதாக ஸ்டெல்லா மேரீஸில் பயின்றுவரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவி ஒருவர் காஷ்மீர் பகுதியில் தொடரும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது ஏற்படும் என்ற கேள்வியை முன்வைத்தார். ''2004 முதல் 2014 வரை காஷ்மீர் பிரச்சனைகளுக்கு தீர்வை எட்ட காங்கிரஸ் கட்சி உழைத்தது. அங்கு நல்ல மாற்றம் தெரிந்தது. ஆனால் தற்போது காஷ்மீர் பிரச்சனையை அரசியலாக பார்ப்பதால். பிரச்சனை தீர்க்கப்படவில்லை. நாட்டின் பிரதமர் காஷ்மீர் மீது அக்கறையுடன், அவர்களை அரவணைத்தால், காஷ்மீர் மக்களும் அவரை அரவணைப்பார்கள். கொள்கை ரீதியாக ஒத்துபோகாத பிடிபி கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்காக கூட்டணி வைத்தது. இரண்டு தரப்புக்கும் இருந்த வேறுபாடுகள் பிரச்னையை மேலும் பெரிதாகிவிட்டது,''என்றார் ராகுல் காந்தி.

பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் தென்னிந்தியாவுக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை ஒரு மாணவி கேட்டார். ''காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த பா.சிதம்பரம்தான் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்தார். எங்கள் ஆட்சியில் தென்னிந்தியாவுக்கு போதிய முக்கியத்துவத்தை வழங்கிவந்தோம். தற்போதைய ஆட்சி டெல்லியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. இங்குள்ள மக்களின் கலாசாரம், உணவு போன்றவற்றை கவனத்தில் கொள்வதில்லை,''என்றார் ராகுல்.

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது எது? என்ற ஒரு மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் “ஊழல்தான் பெரிய தடை” என்றார். ''நம் நாட்டில் கூட்டாளிகள் முதலாளித்துவம்(crony capitalism) தான் பெரிய சிக்கலாக உள்ளது. 15-20 நபர்கள் நாட்டின் எல்லா விஷயங்களையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களிடம் மட்டுமே செல்வம் குவிந்துகிடக்கிறது . அவர்களின் ஊழல்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது,'' என்றார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ராகுல், ''நீரவ் மோதி, விஜய் மல்லையா போன்ற நபர்கள் உங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டு சென்றுவிட்டார்கள். நீரவ் மோதிக்கு வங்கிகள் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. உங்களுக்கு அதில் ஒரு துளி அதாவது வெறும் 30 லட்சம் ரூபாய் கொடுத்தால், நீங்கள் பலருக்கு வேலைவாய்ப்பை கொடுப்பீர்கள். தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. உங்களில் பலருக்கு கல்லூரி முடித்து சென்றால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?,'' என ராகுல் கேட்க பல மாணவிகள் இல்லை என பதில் தந்தனர்.

''ஒரு மணிநேரத்தில் சீனா 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால் இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்குகிறது. இந்த நிலையில் அடுத்து 10 அல்லது 20 ஆண்டுகள் நாம் சீனாவுடன் போட்டியிடப்போகிறோம்,''என்று கூறினார் ராகுல். பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும்போது, பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று குறிப்பிட்டார் ராகுல். நிகழ்ச்சியின் முடிவில் மாணவிகளிடம் தனது சமூக வலைதளபக்கங்களில் தன்னை பின்தொடரலாம் என்று தெரிவித்தார்.