இந்திய விமான நிலையங்களை பயங்கரவாதிகள் தாக்கப்போவதாக உளவுத்துறை புதிய எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
இந்திய விமான நிலையங்களை பயங்கரவாதிகள் தாக்கப்போவதாக உளவுத்துறை புதிய எச்சரிக்கை!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து கடந்த 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக மறுநாள் 27-ந்தேதி பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இரு நாட்டு விமானப்படைகள் மோதியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் பதட்டம் உருவானது. பிறகு அதிர்ஷ்டவசமாக போர் பதட்டம் தணிந்தது. என்றாலும் இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த முயற்சி செய்யும் என்று உளவுத்துறை எச்சரித்தது. முதலில் ராணுவ நிலைகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறி வைப்பதாக கூறப்பட்டது. 

அதன் பிறகு மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ரெயில் நிலையங்களையும், எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பயங்கரவாதிகள் குறி வைப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் விமானங்களை கடத்தவும், விமான நிலையங்களை தாக்கவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக நேற்று உளவுத்துறை புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து உஷாராக இருக்கும்படி விமான போக்குவரத்துத் துறைக்கு மத்திய உள்துறை தகவல் அனுப்பி உள்ளது.

அதன்பேரில் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஏற்கனவே விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. சென்னை உள்பட சர்வதேச விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்கள், ராணுவ விமான தளங்கள், ஹெலிகாப்டர் இறங்கும் இடங்கள், விமான பயிற்சி மையங்கள் மற்றும் விமான பயணிகள் தொடர்புடைய அனைத்து இடங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. விமான நிலைய பாதுகாப்புக்காக 20 விதமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் அனைவரையும் உன்னிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விமான நிலையத்துக்குள் சந்தேகப்படும்படி வரும் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலைய கட்டிடங்கள் அருகே தேவையில்லாமல் வாகனங்களை அதிக நேரம் நிறுத்தி வைப்பதை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. விமான நிலைய பகுதிகளில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகை விமானங்கள் எதுவும் பறந்து வராமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதுபோல விமான பயணிகளுக்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் அதிக லக்கேஜ்களை எடுத்து வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டு வரும் கைப்பை உள்பட அனைத்து உடமைகளையும் தீவிரமாக சோதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தி சென்று இந்தியாவை மிரட்ட திட்டமிட்டு இருப்பதாக சர்வதேச உளவுத்துறை நிறுவனங்களும் ஏற்கனவே எச்சரித்துள்ளன. இதை கருத்தில் கொண்டே நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் முழுமையான உஷார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படி எது நடந்தாலும் உடனுக்குடன் பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் முக்கிய விமான நிலையங்களில் கெடுபிடி அதிகரித்துள்ளது.