அபிநந்தனால் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் நவீன ரக போர் விமானமான 'எப்-16'.
பாகிஸ்தானில் உள்ள பலாகோட் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் ராணுவம் கடந்த புதன்கிழமை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது. காஷ்மீரில் ரஜோரி ராணுவ முகாமை தகர்ப்பதற்காக பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த மூன்று எப்.16 வகை விமானங்கள் ஊடுருவி வந்தன. அந்த விமானங்களையும் இந்திய விமானப்படை போர் விமானங்கள் வழிமறித்து தாக்கி விரட்டியடித்தன. இதனால் தனது முயற்சியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் விமானப்படை தப்பி ஓடியது. அப்போது அந்த 3 விமானங்களையும் இந்திய போர் விமானிகள் விரட்டி சென்றனர்.
அதில் ஒரு பாகிஸ்தான் விமானத்தை அதிரடியாக சுட்டு வீழ்த்தினார்கள். அந்த விமானம் எப்-16 வகை விமானம் ஆகும். அந்த விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது அபிநந்தன் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த விமானத்தை சுட்டப்போதுதான் எதிர் தாக்குதலுக்கு உள்ளாகி தான் ஓட்டி சென்ற விமானத்தை இழந்தார். இதனால் உயிர் தப்பிக்க பாராசூட் மூலம் குதித்தார். காற்று மிக அதிகமாக வீசியதால் அந்த பாராசூட் பாகிஸ்தான் எல்லைக்குள் இழுத்து செல்லப்பட்டு விட்டது. இதன் காரணமாகவே அவர் பாகிஸ்தானிடம் போர் கைதியாக பிடிபடும் துரதிருஷ்டநிலை ஏற்பட்டது.
இந்தியாவின் எச்சரிக்கையை தொடர்ந்து அபிநந்தனை கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் விடுவித்தது. தற்போது அபிநந்தன் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அபிநந்தன் பாகிஸ்தான் விமானங்களை எப்படி எதிர்கொண்டார்? எப்படி தாக்குதல் நடத்தினார்? அதன்பிறகு எப்படி அவர் பாகிஸ்தானில் சிக்கினார்? பாகிஸ்தானில் அவருக்கு என்னென்ன நடந்தது என்பது போன்ற தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர தொடங்கி உள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவின் நவீன ரக போர் விமானமான எப்-16 விமானத்தை உலகிலேயே முதன் முதலில் சுட்டு வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை அபிநந்தன் பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா தயாரிப்பான எப்.16 வகை விமானங்களை அது சில நிபந்தனைகளுடன்தான் பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக எப்-16 வகை விமானங்களை பயன்படுத்தக்கூடாது என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். அந்த நிபந்தனையை மீறி பாகிஸ்தான் செயல்பட்டு இருப்பதை உலகுக்கு இந்தியா அம்பலப்படுத்தி உள்ளது.
மேலும் எப்-16 வகை விமானங்கள் மீது உலக அளவில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட எப்-16 வகை விமானங்கள் இதுவரை உலகில் எங்குமே சுட்டு வீழ்த்தப்பட்டது கிடையாது. ஆனால் முதன் முதலாக எப்.16 வகை விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தி இருக்கிறார். விய்ம்பல் ஆர்-73 என்ற நவீன ஏவுகணையை பயன்படுத்தி அந்த விமானத்தை அபிநந்தன் சாய்த்துள்ளார்.
அபிநந்தன் பாகிஸ்தானின் போர் விமானங்களை விரட்டி சென்றபோது ஆர்-73 ஏவுகணையை பயன்படுத்தப் போவதாக இந்திய விமானப்படை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் அனுப்பி இருந்தார். அந்த தகவல் அனுப்பிய அடுத்த வினாடியே அவர் ஏவுகணையை வீசி பாகிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்தி விட்டார்.
அந்த செய்திதான் அன்று அவர் இந்திய விமானப்படைக்கு அனுப்பிய கடைசி செய்தியாகும். ஏவுகணை அனுப்பி எப்-16 போர் விமானத்தை நாசமாக்கிய பிறகு அபிநந்தன் தனது மிக் விமானத்தில் தாயகம் திரும்ப முயன்றார். அதற்குள் பாகிஸ்தானின் தாக்குதலால் மிக் விமானம் தரையில் விழும் நிலை ஏற்பட்டதால் அபிநந்தன் பாராசூட்டில் குதிக்க வேண்டியதாயிற்று.
உலக அளவில் எப்-16 வகை போர் விமானத்தை முதன் முதலில் சுட்டு வீழ்த்திய வீரர் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து அபிநந்தனுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அகில இந்திய ஜெயின் அமைப்பு அபிநந்தனுக்கு அகிம்சா புரஸ்கார் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. அபிநந்தனின் வீரத்தை பாராட்ட இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த (ஏப்ரல்) மாதம் 17-ந்தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தன்று இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது 2.50 லட்சம் ரொக்கப் பரிசும், நினைவு கேடயமும் கொண்டதாகும்.