SuperTopAds

இந்தியாவிடம் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் - பிரதமர் மோடி பேச்சு

ஆசிரியர் - Admin
இந்தியாவிடம் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் - பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவிடம் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்திய பிரச்சினையில், இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும்போது, இங்குள்ள சில கட்சிகள் தாக்குதல் பற்றி கேள்வி எழுப்புகின்றன. எனது எதிர்ப்பாளர்கள் தாராளமாக என்னைப் பற்றி விமர்சனம் செய்யலாம்.

ஆனால் அவர்களது மோடிக்கு எதிரான கிளர்ச்சி மசூத் அசார், ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக ஆகிவிடக்கூடாது. ஒட்டுமொத்த நாடே ரபேல் போர் விமானம் இல்லையே என்ற கவலையில் இருந்தபோது, இந்திய விமானப்படையிடம் அந்த விமானம் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என அறிந்துகொள்வதற்கு ஆவலாக இருக்கிறது.

இந்தியாவிடம் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் அதிக சாதனைகளை செய்திருக்க முடியும். முந்தைய அரசின் சுயநலத்தால் நாடு பலவகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசியல் ரபேல் போர் விமானம் பக்கம் திரும்பியிருக்கிறது.

நாட்டின் முன் உள்ள சவால்களில் ஒன்று, சிலர் தங்கள் சொந்த நாட்டையே எதிர்ப்பது தான். தேசம் முழுவதும் ஆயுத படைகளுக்கு ஆதரவாக இருந்தபோது, சில கட்சிகள் அவர்கள் மீது சந்தேகம் எழுப்புகின்றன. இதுபோன்ற கட்சிகளின் கருத்துகளையும், அறிக்கைகளையும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துகிறது.

மோடிக்கு எதிரான விமர்சனங்கள் மூலம் அவர்கள் நாட்டை எதிர்க்கிறார்கள், நாட்டின் நலன்களையும் சமரசம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நமது ஆயுதப்படைகள் மீது நம்பிக்கை இருக்கிறதா? அல்லது சந்தேகப்படுகிறீர்களா? என்று கேட்க விரும்புகிறேன். இது போன்றவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, மோடியை தாராளமாக எதிர்க்கலாம், அரசின் பணிகளில் உள்ள குறைபாடுகளை சொல்லலாம், ஆனால் பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களுக்கு உதவி செய்யாதீர்கள்.

மோடியை எதிர்க்கிறீர்களா? செய்யுங்கள், ஆனால் தேசநலன்களை எதிர்க்காதீர்கள். அவர்களது மோடிக்கு எதிரான தொல்லைகள் மசூத் அசார், ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளுக்கு உதவாத வகையில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். இந்தியாவின் ஒற்றுமை நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் பலரையும் பயமுறுத்தி உள்ளது.

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானதாக இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் கட்டுமான தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதுவரை 1.3 கோடி வீடுகள் கட்டியுள்ளது. முந்தைய அரசு 25 லட்சம் வீடுகள் தான் கட்டியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது.

வீடு என்பது 4 சுவர்கள் மட்டுமல்ல. ஒருவர் தனது கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றும் உரிமை படைத்த இடமாக இருக்க வேண்டும்.

இந்த பிரச்சினையை தீர்க்கவும், வேகமாக நகர்மயம் ஆக்குவதற்கும் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம், ஸ்மார்ட் நகரங்கள் போன்ற பல திட்டங்கள் மூலம் நாங்கள் பணியாற்றி வருகிறோம். 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியனும் சரியான வீடு பெறவேண்டும் என்பதே எனது கனவு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.