இந்திய விமாப்படை வீரரா் அபிநந்தனுக்கு இந்திய மக்கள் கொடுத்த அதிா்ச்சி, மகிழ்ச்சியில் உறைந்துபோனாராம்..

ஆசிரியர் - Admin
இந்திய விமாப்படை வீரரா் அபிநந்தனுக்கு இந்திய மக்கள் கொடுத்த அதிா்ச்சி, மகிழ்ச்சியில் உறைந்துபோனாராம்..

எல்லையில் போர் பதற்றம் நிலவி வந்த வேளையில் சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் (வயது 35) பாகிஸ்தானிடம் சிக்கினார். புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் கடந்த 26-ந் தேதி சென்று, பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டு போட்டு அழித்தன. 

இது அந்த நாட்டுக்கு பேரிடியாக அமைந்தது. அடுத்த நாளே (27-ந் தேதி) பாகிஸ்தான், அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. உஷார் நிலையில் இருந்த இந்திய விமானப்படை, அந்த விமானங்களை விரட்டியடித்தது. 

பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.  ஆனாலும் கூட, நமது ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்றை இழக்க நேரிட்டது. பாகிஸ்தான் பகுதிக்குள் (ஹோரா கிராமம்) அந்த விமானம் விழுந்ததில், அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. 

அவர் ராவல்பிண்டி நகருக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இது பற்றிய தகவல், இந்திய மக்கள் அத்தனைபேர் முகங்களிலும் கவலை ரேகையை படியச்செய்தது. ஆனால் அபிநந்தன் எந்த பாதிப்புமின்றி, பத்திரமாக உடனடியாக விடுதலை செய்து, திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்தியா உறுதிபட கூறியது.

இன்னொரு பக்கம் சர்வதேச தலைவர்கள், பதற்றத்தை தணிக்கும் வகையில் பாகிஸ்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அபிநந்தன் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் 

நேற்று முன்தினம் அறிவித்தார். அவரை வான்வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்தியா கூறியது. ஆனால் சாலை வழியாக வந்து வாகா எல்லையில் அவர் முறைப்படி ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் கூறி விட்டது.

இதற்கிடையே அபிநந்தனின் விடுதலை செய்தி கிடைத்த உடனேயே, சென்னையில் வசித்து வந்த அவரது தந்தையும், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுமான சிம்மகுட்டி வர்த்தமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் டெல்லி விரைந்தனர். நள்ளிரவுக்கு பின்னர் டெல்லி சென்று அடைந்த அவர்கள் 

காலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் சென்றனர். அங்கிருந்து அவர்கள் வாகா விரைந்தனர். வாகா எல்லை அபிநந்தனை வரவேற்பதற்காக திருவிழாக்கோலம் பூண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக்கொடிகளுடன் காலை முதலே குவியத்தொடங்கினர். 

மேளதாளம் முழங்க அனைவரும் உற்சாக மிகுதியால் ஆடிப் பாடினர். பாகிஸ்தான் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டியில் இருந்து சுமார் 350 கி.மீ. தொலைவில் உள்ள லாகூருக்கு அபிநந்தன் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து அவர் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு பிற்பகல் 3 மணி அளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் 

என்று தகவல் வெளியானது. ஆனால் நேரம் கடந்ததே தவிர அபிநந்தன் அழைத்து வரப்படவில்லை. பின்னர் மாலை 6.15 மணி அளவில் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நேரம் கடந்த பிறகும் அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் அழைத்து வரவில்லை. 

மருத்துவ பரி சோதனைகள் உள்ளிட்ட நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாகா எல்லையில் பரபரப்பு நிலவியது. அபிநந்தன் எப்போது அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்த்து, அனைவரும் வழிமேல் விழிவைத்து ஆவலுடன் காத்து இருந்தனர்.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு பிறகு இரவு 9.15 மணி அளவில் வெளியுறவுத்துறை பெண் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்தனர். 

அப்போது அபிநந்தன் கோட்-சூட் அணிந்து இருந்தார். 9.20 மணிக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். எல்லையில் உள்ள மிகப் பெரிய இரும்பு ‘கிரில் கேட்’ திறக்கப்பட்டதும், அதன் வழியாக அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்தார்.

 அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அதிகாரிகள் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்த்து கோஷங் களை எழுப்பினார்கள். விடுதலையாகி வந்த அபிநந்தனை, யாரும் சந்திக்க விமானப்படை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

அவரை உடனடியாக அங்கிருந்து காரில் அமிர்தசரசுக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அபிநந்தனை அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை விமானப்படை அதிகாரிகள் மேற்கொண்டனர். 

கடந்த புதன்கிழமை பாகிஸ்தானிடம் பிடிபட்ட அபிநந்தன், 3 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பி இருக்கிறார். அபிநந்தன் விடுதலை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, வாகா எல்லையில் மாலையில் நடைபெறுகிற எல்லை மூடல் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது.