SuperTopAds

குஜராத் சர்வதேச எல்லை அருகே உளவு பார்க்க வந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

ஆசிரியர் - Admin
குஜராத் சர்வதேச எல்லை அருகே உளவு பார்க்க வந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கடந்த 14ந்தேதி சென்று கொண்டிருந்த துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்த சர்வதேச எல்லை பகுதியருகே பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை இந்திய விமான படை இன்று சுட்டு வீழ்த்தியது. இதுபற்றி கேட்கப்பட்டதற்கு பெயர் வெளியிட விருப்பம் தெரிவிக்காத போலீஸ் அதிகாரி ஒருவர், இந்த சம்பவம் நடந்துள்ளது.

நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார். எனினும் இதுபற்றி வேறு தகவல்கள் எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டார். ஆளில்லா விமானத்தின் பாகங்கள் நங்காடாத் கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது. அதனை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.