"புல்வாமா தாக்குதலால் மக்கள் மனதில் இன்னும் கடும் கோபம்" - பிரதமர் மோடி!

ஆசிரியர் - Admin

தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் மே மாதத்தில் மன் கி பாத் வானொலி உரை நிகழ்த்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் 53ஆவது முறையாக பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். கனத்த இதயத்துடன் பேசுவதாகக் குறிப்பிட்டு அவர் உரையைத் தொடங்கினார். புல்வாமா தீவிரவாத தாக்குதலை பற்றி குறிப்பிட்ட மோடி, இந்த தாக்குதலால் நாட்டு மக்கள் மனதில் கோபமும், வலியும் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

தாய் மண்ணுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு தலை வணங்குவதாக கூறிய பிரதமர், உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் ராணுவத்தில் சேர விரும்புவதை பார்க்க முடிவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். ராணுவ வீரர்கள், இணையற்ற தைரியத்தை வெளிப்படுத்துவதாகக் கூறிய மோடி, ஒரு புறம் அமைதியை நிலைநாட்டுவதிலும், மறுபுறம் தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் பதிலடியையும் ராணுவ வீரர்கள் கொடுத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்தியாவில் தேசிய போர் நினைவிடம் இல்லாதது தனது மிகுந்த வலியை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ள அவர், டெல்லியில் இந்தியா கேட் அருகே கட்டப்பட்டுள்ள நினைவிடத்தை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் மே மாதத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.