அனில் அம்பானிக்கு '450 கோடி ருபாய்' அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஸ்வீடனில் தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம்தான் எரிக்சன். அந்நிறுவனத்திடமிருந்து சாதனங்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை திருப்பிச் செலுத்த தவறிவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்.
இதன் காரணமாக அனில் அம்பானி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது எரிக்சன் நிறுவனம். இறுதியாக, செட்டில்மென்ட் தீர்வு மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனிடமிருந்து 550 கோடி ரூபாய் பணத்தை பெற சம்மதித்தது.
அதனை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பணத்தை செலுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது எரிக்சன் நிறுவனம்.
தீர்ப்பு கேட்டு அதிர்ந்த அனில் அம்பானி
இன்றைய தினம் எரிக்சன் நிறுவனம் தொடுத்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், அனில் அம்பானியை குற்றவாளி என அறிவித்தனர்.
தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியில் எழுந்து நின்ற அனில் அம்பானி, தனது வழக்கறிஞர்கள் மற்றும் சகாக்களுடன் பேசியதாக மூத்த நீதிமன்ற செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு பெற்ற இரண்டாவது தொழிலதிபர் அனில் அம்பானி. இதற்குமுன்பு, சுப்ரத் ராய் சஹாராவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
4 வாரங்களுக்குள் 450 கோடியை கட்டுங்கள்
இன்னும் நான்கு வாரங்களில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையான 450 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று அனில் அம்பானியிடமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இரு இயக்குநர்களிடமும் கறராக தெரிவித்த நீதிபதிகள், இந்த தொகையை கட்டாத பட்சத்தில் மூவருக்கும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை பெற வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்.