'ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தடை' - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் முடிவை மீறி வேதாந்தா நிறுவனம் தனது ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் தொடர்பான மற்றனைத்து விவகாரங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசியலமைப்பு நீதிமன்றங்களிலே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இனி ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலேயே மேல்முறையீடு செய்ய முடியும்" என்றும் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராம்நாத் இந்த தீர்ப்பு குறித்து கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, நாங்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவசர வழக்காக எடுக்க செய்வோம்" என்றார். பல நாட்களாக, ஆலை இயங்காததால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. அதுதான் எங்களை மேலும் வருத்தப்பட வைத்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி
20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆலைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு இந்த ஆலையை மூட கோரி ஏராளமான போராட்டங்கள் நடந்தன. மார்ச் மாதத்தில் நடந்த போராட்டம் நாடு முழுவதிலும் பலரின் கவனத்தை ஈர்த்தது. மிகவும் முக்கிய நிகழ்வாக மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசால் ஆலை மூடப்பட்டது.
2018 மே மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஏராளமான கண்டனங்கள் மற்றும் கேள்விகள் எழுந்தன. நீதிமன்றமும் துப்பாக்கிசூடு தொடர்பாக வினவியது. அதேவேளையில் போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், கலவரத்திற்கு காரணமாக இருந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் 200க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லாது என்று கூறி அந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளதுடன், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆலை மூடப்பட்டதற்காக தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்கவும் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து செயற்பாட்டாளர் பாத்திமா சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்கிறார். இதன் அடிப்படையில், தாம் விசாரித்து உத்தரவிடும் வரையில் இப்போதுள்ள நிலையே தொடரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதற்கிடையே, தமிழக அரசும் பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு செல்லும் என்றும் ஆனால், இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் உத்தரவிட்டது.
இது அந்த ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்திய நிலையில் இன்று இந்த தீர்ப்பு வெளியாகவுள்ளது.