'இந்தியாவிடம் தாக்குதலுக்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்' - பாகிஸ்தான் சவால்!
ஜெய்ஷே முகமது பயங்கரவாத இயக்கத்தை 2002ம் ஆண்டு முதல் தடை செய்திருப்பதாகவும், அந்த இயக்கத்தின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
புல்வாமாவில் 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரின் உயிரைப் பறித்த கொடிய தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, ஜெய்ஷே முகமது போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது.
இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, இந்தியாவிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் என்று சவால் விடுத்துள்ளது. ஜெய்ஷே முகமது இயக்கத்தை 2002ம் ஆண்டு முதல் தடை செய்திருப்பதாகவும், அந்த இயக்கத்தின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுதத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா தனது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் மீது பழியைப் போடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதிய போது பாகிஸ்தான் குறித்த ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் அதனை நிராகரித்தது மோடி தான் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதனிடையே உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா அரசு ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 25 நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்தை அரசு கொள்கையாக கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் அனைத்துவித வர்த்தகத் தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
வர்த்தகத்திற்கு தகுதியான நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையை அடுத்து, பாகிஸ்தான் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 200 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்துவரும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹாசிம் குரேஷி, ஃபசல் ஹக் குரேஷி, ஷப்பீர் ஷா ஆகியோரின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.