SuperTopAds

"மோடியை ஆட்சியை விட்டு விரட்டியடிப்பது தான் எனது முதல் வேலை" - பிரகாஷ்ராஜ் பேட்டி!

ஆசிரியர் - Admin

பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். 

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் பேசுகிறார். இது தவிர 8 ஆட்டோக்களில் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரமும் செய்கிறார். கட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். 

மேலும் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார். 

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:- 

நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் எனக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். தனி மனிதனாக குரல் கொடுத்த எனக்கு ஆதரவு அளிப்பதோடு, மோடிக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும். 

அந்தந்த மாநில பிரதிநிதிகள்தான் எம்.பி.யாகி பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய கருத்து. இதனால்தான் நான் பெங்களூருவில் போட்டியிடுகிறேன்.

ரஜினிகாந்த் ஒருநேரம் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்தை கூறுகிறார். இன்னொரு நேரம் அதற்கு எதிரான கருத்தை கூறுகிறார். அவர் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.