"தேசத்தை மீட்டெடுக்க இன்னொரு சுதந்திர போராட்டம் தேவை": ப.சிதம்பரம் உருக்கம்.

ஆசிரியர் - Admin

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், கடந்த ஆண்டு தான் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக தொகுத்துள்ளார். ‘அன்டாண்டட்: சேவிங் தி ஐடியா ஆப் இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த புத்தகத்தை ரூபா பப்ளிகே‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை அவர் வெகுவாக சாடி உள்ளார். 

அதில் அவர் கூறி இருப்பதாவது:- நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போனால் அதை மீட்டு விட முடியும். சமூகம் பிளவுபட்டு விட்டால் அதை சரிசெய்து ஒற்றுமையை நிலை நிறுத்தி விட முடியும். ஆனால் உடைக்கப்பட்டு விட்டால் சரி செய்ய முடியாத ஒன்று இருக்கிறது என்றால் அது தான் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டமும், அது சார்ந்த மதிப்புகளும்தான்.

தற்போது அரசியல் அமைப்பு சட்டம் மீதான மதிப்புகள் ஒவ்வொன்றும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. குறிப்பாக சுதந்திரம், சமத்துவம், தாராளமயம், மதச்சார்பின்மை, தனி உரிமை, அறிவியல் கோட்பாடு போன்றவற்றை சொல்லலாம். இந்திய அரசியல் அமைப்பு சட்டம், இந்துத்துவா கொள்கைகளால் கவரப்படக்கூடிய ஆவணத்தால் மாற்றப்படும் அபாயகரமான சூழல் தற்போது தெளிவாக நிலவுகிறது.

இந்தியா என்றால் இப்படித்தான் என்று நமது தேசத்தை நிறுவியவர்கள் காட்டிச்சென்ற தோற்றம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு இன்னொரு சுதந்திரப்போராட்டத்துக்கும், இன்னொரு மகாத்மா காந்திக்கும் குறைவில்லாமல் தேவைப்படும்.

இன்று இந்தியாவை அச்சம்தான் ஆட்சி செய்கிறது என்று சொல்வதற்கு நான் தயங்கவில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் அச்சத்தில் தான் வாழ்கின்றனர். அண்டை வீட்டுக்காரரால் அச்சம், தீய மனதுடன் நடைமுறைப்படுத்துகிற சட்டத்தால் அச்சம், சமமற்ற பலத்தால் அச்சம், எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசைப்பற்றியும் அச்சம் உள்ளது. சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு அச்சம் விரட்டியடிக்கப்பட வேண்டும். இது எளிதான காரியம் இல்லை அதற்காக நாம் அதை விட்டு விட முடியாது.

சராசரி குடிமகன்கள்கூட, ஒரு மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலிலும், மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும் எதிராக வாக்களிக்க தைரியத்தை வரவழைத்து உள்ளனர். இருப்பினும் இலக்கு இன்னும் முடியவில்லை. அந்த இலக்கு இன்னும் 100 நாட்களில் முடிக்கப்பட வேண்டும். நாம் அந்த இலக்கை முடிக்கிற வரையில் அச்சமின்றி தொடர வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

இந்த புத்தகத்துக்கு முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி முன்னுரை எழுதி இருப்பதும், அதில் அரசியல் அமைப்புகளின் செயல்திறன் பற்றி உதாரணங்களுடன் விளக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.