SuperTopAds

கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான ‘கஜராஜா’ யானை மரணம்!

ஆசிரியர் - Admin
கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான ‘கஜராஜா’ யானை மரணம்!

கேரளாவில் ஏராளமான யானைகள் கோவில்களிலும், தனியாராலும் வளர்க்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் யானை காப்பகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளது. இங்கும் பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள கோவில்களில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்க அந்த கோவில்களுக்கு யானைகளை பலரும் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். 

கேரளாவில் உள்ள மன்னர் குடும்பமான திருவிதாங்கூர் ராஜகுடும்பம் சார்பில் 1950-ம் ஆண்டு கோடநாடு யானை காப்பகத்தில் இருந்து ஒரு பெண் யானை குட்டி வாங்கப்பட்டது. அந்த யானை குட்டிக்கு தாட்சாயினி என்று பெயர் சூட்டி ஆற்றிங்கல் திருவாராட்டு காவுக்கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தனர். அதன்பிறகு அந்த யானை 1960-ம் ஆண்டு செங்கல்லூர் மகாதேவர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. பிறகு அங்கேயே தேவசம்போர்டு பராமரிப்பில் யானை தாட்சாயினி இருந்து வந்தது.

இந்த நிலையில் 88 வயது ஆன நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தாட்சாயினி யானையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த யானை திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனம் கோடு மனமேல்குன்று பகுதியில் உள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான யானை காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த யானைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தாட்சாயினி யானை நேற்று பிற்பகல் மரணம் அடைந்தது. இந்த தகவல் கிடைத்ததும் திருவிதாங்கூர் ராஜகுடும்ப பிரதிநிதி அங்கு சென்று தாட்சாயினி யானைக்கு அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பக்தர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தாட்சாயினி யானை பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் பத்மநாபசுவாமி கோவில் சாமி ஊர்வலம் உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த சுவாமி ஊர்வலங்களில் பங்கேற்ற பெருமை பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு இந்த யானைக்கு ‘கஜராஜா’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் அதே ஆண்டு ஆசியாவிலேயே அதிக வயது உள்ள யானை என்ற சிறப்பையும் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தாட்சாயினி யானை இடம்பெற்றது.

கேரள மக்களின் மனம் கவர்ந்த யானையாக வலம் வந்த தாட்சாயினின் மரணம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த காப்பகத்திலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.