SuperTopAds

மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு தேவேகவுடா ஆதரவு!

ஆசிரியர் - Admin
மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு தேவேகவுடா ஆதரவு!

மேற்கு வங்க மாநில உயர் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களை மீறி, அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அவர்களை கைது செய்ய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- 

மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரியை, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்ற விவகாரத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேர் எதிர் போட்டி ஏற்பட்டுள்ளது. இது அவசர கால பிரகடன நிலையை எனக்கு நினைவுபடுத்துகிறது.

மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் அவசர, அவசரமாக கைது செய்ததையும், அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதேபோன்றதொரு நிலையைத்தான் இந்த நாடு அவசர கால சூழ்நிலையில் சந்தித்தது. மேற்கு வங்காளத்தில் இப்போதுள்ள சூழ்நிலை அவசர கால நிலையைப் போன்றே உள்ளது.

மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கும் ‘மகாகத்பந்தன்’(மெகா கூட்டணி) கூட்டணியின் துருப்புச்சீட்டு ஆவார். அவருடன் பெரும் கூட்டணி அமைத்துள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சியும், நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய செயல்பாடு உள்ள பங்குதாரர்தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சேவ் டெமாக்ரசி’ (ஜனநாயகத்தின் பாதுகாப்பு) என்ற ‘ஹாஷ் டேக்’கில்இதுபற்றி தெரிவித்துள்ள கருத்து பற்றிய விவரம் வருமாறு:- கர்நாடக காங்கிரசுடனான கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்கிறது. இந்த கூட்டணி, மத்திய அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கையும், கூட்டணி ஆட்சிக்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டிக்கிறது. மத்திய அரசின் செயல்பாடு, நாட்டில் கூட்டணி அரசுக்கான அச்சுறுத்தலாக இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்து செல்லும் நேரம் வந்துவிட்டது’’ என்று பதிவிட்டுள்ளார்.