SuperTopAds

"மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்" - மோகன் பாகவத் அறிக்கை!

ஆசிரியர் - Admin

ராமர் கோயில் கட்ட மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜின் அர்த் கும்பமேளாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ராமர் கோயில் கட்டப்படும். தயவு செய்து ஆறுமாத காலம் வரை பொறுக்க வேண்டும். மத்தியில் மோடியின் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஏனெனில், அவரது கட்சி மட்டுமே ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி பேசுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் முன் கூடிய விஎச்பிக்கு எதிரான சாதுக்கள் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதில், ”கோயில் கட்டும் திகதியை கூறுங்கள்” என வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இதனால், அங்கு சில மணி நேரம் இருதரப்பின் சாதுக்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இவர்களை விஎச்பி ஆதரவு சாதுவான அகிலேஷ்வராணந்த் தலையிட்டு சமாதானப்படுத்தினார்.

அப்போது எதிர்ப்புக் கூட்டத்தினர் இடையே அகிலேஷ்வராணந்த் பேசும்போது, ”எங்கள் தர்மசபைக் கூட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது என்பதற்காக நாம் ராமர் கோயில் கட்டும் திகதியைக் குறிப்பிடப்போவதில்லை” என தெரிவித்துள்ளார்.