SuperTopAds

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் நாடு கடத்தப்பட்ட ராஜீவ் சக்சேனா கைது!

ஆசிரியர் - Admin
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் நாடு கடத்தப்பட்ட ராஜீவ் சக்சேனா கைது!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த டுபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் எனப்படும் குறித்த வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளது. 

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, இவ்விடயம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பீட்டர் ஹூலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே டுபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட அவர் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.