அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் முதலமைச்சர் பரிந்துரை!

ஆசிரியர் - Admin
அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் முதலமைச்சர் பரிந்துரை!

தமிழகத்தின் முன்னாள் தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்துள்ளார். மதுரை, தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமரிடம் முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது, முக்கியமான 17 கோரிக்கைகளை எழுத்துமூலம் பிரதமர் மோடியிடம் அவர் கையளித்தார்.

அதில் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும், சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டவேண்டும் எனவும், ஓசூர், நெய்வேலி, இராமநாதபுரம் நகரங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அத்துடன், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அளித்த அனுமதியை திரும்பபெற வேண்டும் எனவும், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யவேண்டும் என்பதோடு, அணைப் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறவேண்டும் எனவும் கோரினார்.

மேலும், 14 ஆவது நிதிக்குழு தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்பதோடு, கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.