முதல் முறையாக காஷ்மீர் ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது

ஆசிரியர் - Admin
முதல் முறையாக காஷ்மீர் ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது

ராணுவத்தில் வீரதீர செயல் மற்றும் தன்னலமற்ற உயிர் தியாகத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மிக உயரிய அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் பெற்றிருக்கும் நிலையில், முதல் முறையாக காஷ்மீரை சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த நசிர் அகமது வானி (வயது 38) என்ற அந்த வீரர், கடந்த நவம்பர் 25-ந் தேதி சோபியானில் 6 பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையில் பங்கேற்றார். இதில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகள் தனது உடலை துளைத்த போதும் அசராத நசிர் அகமது வானி 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதுடன், மற்றொருவர் காயமடையவும் காரணமானார்.

இந்த சண்டையில் தலையில் குண்டு பாய்ந்ததால் நசிர் அகமது வானி வீரமரணம் அடைந்தார். ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர் முதலில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்தார். பின்னர் மனம் மாறி 2004-ல் தனது இளம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார்.

நசிர் அகமது வானியின் இந்த தீரமிக்க செயலாற்றல் மற்றும் விலைமதிப்பற்ற உயர்தியாகத்தை பாராட்டி அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவரது மனைவி மகஜாபீனிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்குகிறார்.