தமிழக முகாம்களில் உள்ள ஈழக அகதிகளை மீளவும் நாட்டுக்கு அழைக்க இலங்கை விருப்பம்..
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா- தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர விரும்புவதாக இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
போர் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களை நாட்டிற்கு மீண்டும் அழைக்க விருப்பம் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபேதே இது குறித்து தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே தமிழகத்தில் இருந்து 5ஆயிரம் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட போர் நடவடிக்கைகள் காரணமாக சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் இதில் 70 வீதமானவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பமாக உள்ளதாகவும் அரசும் அதனையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த மக்கள் தங்கியுள்ள முகாங்களுக்கு செல்லவுள்ளதாகவும் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் பாதுகாப்பும் எவ்வாறு உள்ளது குறித்து பார்வையிட உள்ளதாகவும் ஒஸ்டின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.