ஜல்லிக்கட்டில் போலீசார் உள்பட 47 பேர் காயம்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகர ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையாளர் அனிஷ்சேகர் ஆகியோர் முன்னிலையிலும் தொடங்கியது.
விழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட குழுவினர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் பதிவு செய்யப்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் வாடிவாசல் பின்புறம் வரிசையாக நிறுத்தப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர்.
வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்த முரட்டுக் காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் பாய்ந்து வீரர்களை பந்தாடியது. மாடுபிடி உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை பார்க்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்கள் குறைந்த அளவில் காணப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு காலை 8 மணி தொடங்கி நான்கு மணியளவில் முடிவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 552 ஜல்லிக்கட்டு வீரர்களில் 2 பேர் நிராகரிக்கப்பட்டு 550 பேர் கலந்து கொண்டனர். இதில் எடை குறைவில் ஒருவரும் மது அருந்தி வந்தவரும் ஜல்லிக்கட்டில் நிராகரிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டி 8 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் 2 காவலர்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 47 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.