கும்பமேளா - லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவை நடைபெறும். இந்த கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர். வரும் மார்ச் மாதத்தில் நிறைவடையும் இந்த கும்பமேளா காலத்தில் 12 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேசம் மாநில அரசை சேர்ந்த 28 துறை அதிகாரிகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்களை சேர்ந்த உயரதிகாரிகளும் பல மாதங்களாக திட்டமிட்டும் கண்காணித்தும் செய்து வந்தனர்.
கும்பமேளாவுக்காக திரளும் பக்தர்களுக்காக 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளுடனும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கங்கையாற்றங்கரையில் ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டது. 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த தற்காலிக நகரத்தில் பல பெரிய நகரங்களில் உள்ளதுபோல் மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், கடை தெருக்கள் போன்றவை இங்கு அமைக்கப்பட்டன.
50 நாள் விழாவாக நடக்கும் இந்த அர்த கும்பமேளா திருவிழாவுக்காக அரசு 4200 கோடி ரூபாய் செலவிடுகிறது. நாட்டில் உள்ள 13 சாதுக்கள் அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் இவ்விழாவில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் இங்கு வந்து சேர்ந்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஜீவநதிகள் சங்கமமாகும் 'திரிவேணி சங்கமம்' பகுதியில் புனித நீராடி (ஷாஹி ஸ்நானம்) பக்தி பரவசம் அடைந்தனர்.