ஐயப்பனை தரிசிக்க இரு பெண்கள் சென்றது எப்படி?

ஆசிரியர் - Admin
ஐயப்பனை தரிசிக்க இரு பெண்கள் சென்றது எப்படி?

இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை சுமார் 03:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானத்தை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற இந்த இரண்டு பெண்களும் பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன. இந்த இரு பெண்களும் கேரளாவை சேர்ந்தவர்கள். இந்த பெண்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்திருந்தனர். பாஜக ஆதரவு போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக அப்போது இவர்கள் திருப்பியனுப்பட்டனர். பிந்துவின் வயது 40. கனகதுர்காவின் வயது 39. சமூக ஊடகங்களில், ஐயப்பன் கோயில் கருவறையை கருப்பு உடையணிந்த இருபெண்கள் சுற்றி வருவது போன்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த இரு பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

620 கி.மீ. நீள பெண்கள் சுவர்

சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக புத்தாண்டு தினத்தன்று 620 கி.மீ. நீள மனித சங்கிலியை நடத்தினர் கேரள பெண்கள். கேரள அரசு ஏற்பாடு செய்த இந்த மனித சங்கிலி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நீண்டது. அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலியை நடத்தினர்.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த மனித சங்கிலியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷிவிடம் தெரிவித்தனர். இந்த பெண்கள் இயக்கம் நடந்த மறுநாள் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் சபரிமலை கோயில் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சென்றது எப்படி?

மலையாள தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய பிந்து, தாங்கள் அதிகாலை 3.45 மணிக்கு ஐயப்பன் சிலை அருகே சென்று தரிசித்ததாக கூறி உள்ளனர். காலை 1.30 மணிக்கு கிளம்பிய அவர்கள் 6.1 கி.மீ நடந்து சென்றுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் இதனை உறுதிபடுத்தி உள்ளதாக கூறுகிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

அந்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க விஜயன் உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறது ஏ.என்.ஐ-யின் அந்த ட்விட். இதற்கு மத்தியில் கோயில் நடை ஒரு மணி நேரம் சாத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குபின் மீண்டும் திறக்கப்பட்டது. இதைப்பற்றி பேசிய பிந்து, "நான் செயற்பாட்டாளர் மட்டும் அல்ல பக்தரும் கூட. நான் 1978ஆம் ஆண்டு பிறந்தேன். கனகதுர்கா பிறந்த ஆண்டு 1979." "நான் சாஸ்தா பக்தர். கனகதுர்கா சுவாமி ஐயப்ப பக்தர். நாங்கள் இருவரும் நாடெங்கும் உள்ள பல கோயில்களுக்கு சென்றுள்ளோம்" என்றார்.

வனிதாமதிலும் சபரிமலையும்

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மனிதி அமைப்பை சேர்ந்த பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சித்தனர். தற்போது சபரிமலையில் பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று தரிசனம் செய்துள்ள நிலையில், இது குறித்து மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வியிடம் பேசினோம்.

"அப்போது நாங்கள் ஒருங்கிணைத்திருந்த சபரிமலை செல்லும் நிகழ்வுக்கு பிந்துவும், கனகாவும் வருவதாக இருந்தது. ஆனால், காவல்துறை தடுத்ததால் அவர்களால் வர இயலாமல் போய்விட்டது." என்று பிபிசி தமிழின் செய்தியாளர் நியாஸ் அகமதுவிடம் தெரிவித்தார். "நாங்கள் எல்லோரும் கோட்டயத்தில் கூடி அங்கிருந்து சபரிமலைக்கு செல்வதாக திட்டம். ஆனால், போலீஸ் எங்களை நேரடியாக பம்பைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. கோட்டயத்தில் கூடிய பிந்து, கனகா மற்றும் அவர்களது குழுவை பம்பைக்கு அனுமதிக்காமல் அலைகழித்தது. அந்த சமயத்தில் பிந்துவின் வீடும் தாக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் அழுத்தம்

அப்போது மறுத்த போலீஸ் இப்போது பாதுகாப்பு தர என்ன காரணமென்று நீங்கள் கருதுகிறீர்கள் என்ற நம் கேள்விக்கு, "பெரு மக்கள் அழுத்தம்தான் காரணம்" என்கிறார். அவர், "பெரு மக்களின் விருப்பத்திற்கு எதிராக சென்றுவிடக்கூடாது என்றுதான் அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்பும். பெண்கள் சபரிமலைக்கு செல்வதை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதுபோல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அந்த பிம்பம் நேற்று கட்டுடைக்கப்பட்டது.

கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து 'வனிதா மதில்' என்ற தலைப்பில் மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள். இதன் தாக்கம்தான் போலீஸ் இப்போது பாதுகாப்பாக நிற்க காரணம்." என்கிறார். இனி இது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் போக்கிலும் தாக்கம் செலுத்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.