இந்தியாவின் முதன்மை செல்வந்தரான முகேஷ் அம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்!

ஆசிரியர் - Admin
இந்தியாவின் முதன்மை செல்வந்தரான முகேஷ் அம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்!

இந்தியாவின் முதன்மை செல்வந்தரான முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஒரே ஒரு மகளான இஷா அம்பானிக்கும் தொழிலதிபரான ஆனந்த் பிராமல் என்பவருக்கும் மாராட்டிய மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஆண்டலியா இல்லத்தில் வைத்து இந்த திருமண விழா நடைபெற்றுள்ளது.

சுமார் 710 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி திருமணத்திற்கு முன்னர் ஒருவாரம் நீண்ட விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க அரசியல்வாதியான ஹிலாரி கிளின்டன் மற்றும் பாடகி பியோன்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

திருமணத்தில் கலந்துகொள்ளும் முக்கிய விருந்தினர்கள் பயன்படுத்த 100 விமானங்களையும் முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். மட்டுமின்றி ராஜஸ்தானின் உதயபூர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருவாரகால விழாவின் ஒருபகுதியாக அங்குள்ள ஏழை மக்களுக்கு மூன்று நாட்கள் இலவச உணவும் வழங்கப்பட்டது. இருப்பினும் ஒரு திருமணத்திற்காக இத்தனை ஆடம்பரம் தேவையா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் 84 கோடி மக்கள் 20 ரூபாய்க்கும் குறைவான தொகையில் தங்கள் ஒருநாள் வாழ்க்கையை நடத்தும் நிலையில், இந்த ஆடம்பர திருமண விழாவானது ஏழைகளை ஏளனம் செய்வது போன்றது என வாதிட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆளும் நரேந்திர மோடி அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட காலகட்டத்தில் அப்பாவி மக்கள் தங்கள் சொந்த பணத்தையே வங்கிகளில் செலுத்திவிட்டு, அதை திரும்ப பெறுவதற்கு நாட்கணக்கில் வங்கி வாசல்களில் காத்திருந்தனர்.

ஆனால் அதே காலகட்டத்தில் ரெட்டி சகோதரர்கள் என அறியப்படும் ஜனார்த்தன் ரெட்டியின் மகளின் திருமணம் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 50,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த திருமண விழாவின் மொத்த செலவு 500 கோடி என அப்போது தகவல் வெளியானது. திருமணத்திற்கு ஜனார்த்தன் ரெட்டியின் மகள் பயன்படுத்திய தங்க நகைகள் மட்டும் 70 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. வைர நகைகள் 90 கோடி ரூபாய். திருமண சேலைக்கு மட்டும் 17 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து பேசியதுடன்,

திருமணங்கள் பல நின்றுபோய்விட்டதாம், பணம் இல்லையாம், ஊழல் பேர்வழிகள் என ஏளனமாக சிரித்தது அப்பாவி பொதுமக்களை அவமதித்த செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை இந்திய பொருளாதாரம் நிமிர்ந்தபாடில்லை. சிறு, குறு தொழில், வேலைவாய்ப்பு, விவசாயம் என அனைத்தும் சிதைக்கப்பட்டுவரும் காலகட்டத்தில் முகேஷ் அம்பானி தமது மகளுக்கு 710 கோடியில் திருமண விழாவை சிறப்பித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு