இலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..
இலங்கையில் சமகாலத்தில் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெருமளவு இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து இன்று இணையம் யாழ்.ஊடகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இணையத்தின் சார்பில் கருத்து தெரிவித்த மொஹமட் ஆலம் மற்றும் பிறான்சிஸ் ஜோசப் ஆகியோர் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், இன்று காலை வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சார்பில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை சந்தித்து இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கிறோம்.
இதன்போது இலங்கை அரசியலில் குழப்பமான நிலை உருவானதன் பின்னர் இலங்கையின் கடல் எல்லைக்குள் தொடர்ச்சியாக இந்திய இழுவை படகுகளில் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள்
எமது கடற்பரப்பில் மிக அதிகளவில் காணப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்கள், எதிர்ப்புக்களை காட்டியதுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந் துரையாடல்களை நடாத்தியிருந்தோம்.
இதன் பின்னர் வெளிநாட்டு படகுகள் தடைச்சட்டம் வந்த பின்னர் மிக கணிசமான அளவில் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் குறைந்திருந்தது. ஆனால் தற்போது இலங்கையில் அரசியல் குழப்பங்கள் உருவாகியிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்ததைபோல்
இந்திய இழுவை படகுகளின் அத்து மீறல்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இதனால் தற்போது எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே வெளிநாட்டு படகுகளை தடைசெய்வதற்கான சட்டம் அமுலில் உள்ள நிலையில்
தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியவர்கள் அதனை குறித்து கரிசனை செலுத்தாமல் இருப்பது தவறு என்பதையும், வெளிநாட்டு படகுகள் சட்டத்தினை பூரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் பேசி
உடனடியாக அமுல்படுத்தவேண்டும். எனவும் கூறியிருக்கின்றோம். இதன்படிடையில் ஜனாதிபதியை உடனடியாக சந்திக்கவுள்ளதாக கூறிய ஆளுநர் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவன த்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
அதேபோல் உள்ளுரில் உள்ள இழுவை படகுகளை கட்டுப்படுத்தவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் அது சில அரசியல்வாதிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றது.
இதனால் நாளுக்கு நாள் உள்ளுரில் இழுவை படகுகளின் எண்ணிக்கையும் அந்த தொழிலை செய்யும் கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.
என கூறியுள்ளோம் என்றார்.