2018ஆம் ஆண்டில் தொழில்கிரகம் எப்படியிருக்கின்றது? 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ

ஆசிரியர் - Admin
2018ஆம் ஆண்டில் தொழில்கிரகம் எப்படியிருக்கின்றது? 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ

பார்க்கும் வேலை போராடித்து விட்டதா? புதிய வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா? 2017 ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டிலாவது நல்ல வேலை கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பவர்களுக்கே இந்த ராசிபலன்.

அரசு வேலை கிடைக்குமா? புதிய வேலைக்கு மாறலாமா என்று யோசிக்கும் 12 ராசிக்காரர்களும் இதை படிங்க. தொழில் கிரகம் சனிபகவான் நெருப்பு ராசியான தனுசிலும், குரு பகவான் காற்று ராசியான துலாமிலும் அமர்ந்துள்ளனர்.

ராகு நீர் ராசியான கடகத்திலும், கேது நில ராசியான மகரத்திலும் அமர்ந்துள்ளனர். புதிய வேலைக்கு முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும், அரசு வேலைக்காக தேர்வு எழுத நினைப்பவர்களுக்கும் 2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம் - அதிகாரம் கிடைக்கும்.

2018ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித்தரும். திறமைக்கு ஏற்ப பணி உயர்வு, ஊதிய உயர்வுகளால் பொருளாதாரநிலை ஏற்றமடையும்.

புதிய வேலை வாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களின் கௌரவத்திற்கு நல்லது.

ரிஷபம் - தகுதிக்கு ஏற்ப வேலை

புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை அமைய சற்றுத் தாமதமாகும். 2018ல் ஆரம்பத்தில் தேவையற்ற அலைச்சல்களும் பணியில் நிம்மதிக்குறைவும் ஏற்பட்டாலும் 11.10.2018ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் நல்லதே நடக்கும்.

அட்டமத்து சனி சில சங்கடங்களை கொடுத்தாலும், குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஓரளவுக்குக் கௌரவமான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிடைக்கும்.

மிதுனம் - பாக்கெட்டில் பணம்

மிதுனம் ராசிக்கு சனி 7ல் சஞ்சரிப்பதால் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்து முடிக்க முடியாதநிலை ஏற்படும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

குரு 5ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமையும்.

கடகம் - வெளிநாடு வாய்ப்பு

கடகராசிக்கு சனி 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.

சிம்மம் - உற்சாகம் தரும்

சிம்மம் ராசி உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், பணியிடங்களில் சின்னச்சின்ன சங்கடங்கள் உண்டாகும்.

என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

கன்னி - விமானத்தில் பறக்கலாம்

கன்னி ராசிக்காரர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் தடையின்றி நிறைவேறும் காலம் வந்து விட்டது. வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். 2018 சந்தோசமான காலம்தான்.

துலாம் - ராஜமரியாதை கிடைக்கும்

துலாம் ராசியில் சனி பகவான் முயற்சிஸ்தானமான 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். உங்களின் நிர்வாகத்திறன் அனைவரையும் வியப்படையச் செய்யும், நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இனி ராஜமரியாதை கிடைக்கும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அமையும். உயர்பதவிகள் தேடி வரும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

விருட்சிகம் - அனுகூலம் அமையும்

ஏழரை சனியால் 2018ல் உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனமாக செயல்பட்டால் வெற்றிக்கனியை பறிக்கலாம். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது, உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நன்மையளிக்கும்.

இந்த வருடம் குரு 2018 அக்டோபர் வரை சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும்.

தனுசு - மனமகிழ்ச்சி

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி என்பதால் வேலைகளில் இருப்பவர்கள் தங்களின் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு 11ஆம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். அடுத்தவர் விசயத்தில் அதிகமாக தலையிட வேண்டாம்.

மகரம் - நிதானம் தேவை

ஏழரை சனி ஆரம்பிப்பதால் உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும்.

அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும்.

உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுத முயற்சிக்கலாம் வெற்றி கிடைக்கும்.

கும்பம் - விருப்பம் நிறைவேறும்

2018ஆம் ஆண்டில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கௌரமான உயர்பதவிகள் தேடி வரும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்பவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும்.

மீனம் - நிதானம் வெற்றி தரும்

உங்கள் ராசிக்கு சனி 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் குரு ஜென்ம ராசிக்கு 8ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், சக பணியாளர்களிடம் அனுசரித்து நடப்பதும் நல்லது.

புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அக்டோபர் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும்.

Radio
×