SuperTopAds

எதிர்கால அரசியலில் நாம் இணைந்து செயல்படுவோம்: - திருமுருகனிடம் சரத்குமார் வேண்டுகோள்!

ஆசிரியர் - Admin
எதிர்கால அரசியலில் நாம் இணைந்து செயல்படுவோம்: - திருமுருகனிடம் சரத்குமார் வேண்டுகோள்!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தியை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. சந்திப்பில் என்ன பேசினார்கள் என்று ச.ம.க-வின் நிர்வாகிகளிடம் கேட்டோம்.

``திருமுருகன் காந்தி மீது தொடர்ந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்த சரத்குமார், முக்கியமாக மூன்று தகவல்களைக் குறிப்பிட்டு பேசினார். 

முதலாவதாக, இன்றைக்கு அரசும் சூழ்நிலையும் சரியில்லை. இதனால்தான், மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை முடக்க காவல் துறையினர்மூலம் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இந்தக் காட்சிகள் மாறும்.

அடுத்ததாக, எதிர்கால அரசியலில் நாம் இணைந்து செயல்படுவோம். மூன்றாவதாக, பொய் வழக்குகளைக் கண்டு பயப்பட வேண்டாம். அதை சட்டரீதியாக எதிர்கொள்ளலாம் என்று சரத்குமார் கூறியுள்ளார். அதை திருமுருகன் காந்தியும் ஆமோதித்ததோடு, சிறையில் நடந்த விவரங்களை விளக்கமாக சரத்குமாரிடம் பகிர்ந்தார்" என்றனர்.

அதன்பிறகு சரத்குமாரிடம், `நீங்கள் ஸ்டெர்லைட் போராட்டத்துக்குச் சென்றபோது, அங்குள்ளவர்கள் கொடுத்த குடிதண்ணீரைக் குடித்தீர்கள். அந்த போட்டோ, வீடியோக்களை ஐ.நா சபையில் காண்பித்து விளக்கினேன்' என்று திருமுருகன் காந்தி கூறியிருக்கிறார். அதை சரத்குமார் அமைதியாகக் கேட்டுவிட்டு, `முதலில் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் திருமுருகன்' என்று சரத்குமார் கூறினார்.