மெர்சல் படத்திற்கு கிடைக்கும் மேலும் ஒரு கௌரவம்
விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் மத்திய அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி. ஆகியவற்றைப் பற்றி வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், சில பிரச்சனைகள் எழுந்தது. பின்னர் சர்ச்சைகளை கடந்து இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படம் இந்த வருட கடைசி அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் படங்களின் கதைகளை வெளிநாட்டவர்கள் விரும்ப ஆரம்பித்திருப்பதால், இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.
மேலும் ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்றும் கூறப்படுகிறது.