மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றன மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல

மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்.பாடி சதுரங்கச் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல. அத்தகைய நிறுவனங்களின் தலைமையில் இருப்பவர்கள் புத்தாக்கமாக சிந்தித்து செயற்படவேண்டும்.
அந்த வகையில் பிரதேச செயலர் சா.சுதர்சன், நான் யாழ். மாவட்டச் செயலராக கடமையாற்றிய காலத்தில் உதவி மாவட்டச் செயலராகப் பணியாற்றியவர். அவர் எந்தவொரு விடயத்தையும் விரைவாகச் செய்து முடிக்கக்கூடியவர். உண்மையில் இவ்வாறான சதுரங்கப்போட்டிகளை ஒழுங்குபடுத்திய அவரைப் பாராட்டுகின்றேன்.
அத்துடன் எதிர்காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் விவாதப்போட்டி நடத்த திட்டமிடுகின்றார். அவ்வாறான சிந்தனையுள்ளவர்களே - இவ்வாறான தலைமைத்துவப்பண்புகள் உள்ளவர்களே இன்று எமக்குத் தேவையாகவுள்ளனர்.
இன்றைய பிள்ளைகள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர். அத்தகைய பிள்ளைகளுக்கு இவ்வாறு சதுரங்கத்தைப் பழக்கி போட்டியில் பங்குபற்றச் செய்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.
சதுரங்கம் விளையாடுவதால் மூளை வளர்ச்சியடைகின்றது. அதை ஊக்குவித்த பெற்றோரை வாழ்த்துகின்றேன் மேலும் என ஆளுநர் தெரிவித்தார்.