புது திருப்பம்.. நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் காங். பங்கேற்காது?
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்போது, வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ், மத்திய மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்திருந்திருந்தார். அதை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். 20ம் தேதி வெள்ளிக்கிழமை விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று் அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கி பின்னர், வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில், 266 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியும். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் 312 ஆக உள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 39 நிமிடங்களை பயன்படுத்தி விவாதத்தை முடித்துவிட்டு, வாக்கெடுப்பு நேரத்தில் வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். தங்களுக்கு போதிய பலம் இருப்பதாக சோனியா காந்தி 2 தினங்கள் முன்புதான் தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சி இம்முடிவை எடுத்துள்ளது. அதேநேரம், தெலுங்கு தேசம் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.