SuperTopAds

அயனாவரம் பலாத்கார வழக்கு.. மருந்துக் கடைக்காரர்களைப் பிடித்து துருவி துருவி விசாரணை

ஆசிரியர் - Editor II
அயனாவரம் பலாத்கார வழக்கு.. மருந்துக் கடைக்காரர்களைப் பிடித்து துருவி துருவி விசாரணை

சென்னை: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரசவத்தின்போது வலி குறைப்பதற்காக போடப்படும் ஊசி போடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு போடப்பட்ட ஊசி மருந்தை விற்பனை செய்த மருந்து கடைக்காரர்களிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலாத்காரத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அயனாவரம் மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் போதை ஊசி போட்டதாக புகார் கூறப்பட்டது. ஆனால் கைதான குற்றவாளிகள் போதை ஊசியை பயன்படுத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதற்காக பயன்படுத்தும் ஊசி மருந்தை செலுத்தியது தெரிய வந்தது. சிறுமி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 'லிப்ட்' இயக்கும் ஊழியர் ரவிக்குமார் ஆரம்ப காலத்தில் அயனாவரம் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ஊழியராக வேலை செய்துள்ளார். அந்த சமயத்தில் பிரசவத்தின்போது பெண்களுக்கு வலி ஏற்படாமல் தடுப்பதற்காக போடப்படும் ஊசி மருந்து பற்றி அவர் தெரிந்து வைத்துள்ளார். அந்த வகையில், ரவிக்குமார்தான் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குறிப்பிட்ட ஊசி மருந்தை போட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சிறுமிக்கு போடப்பட்ட ஊசி மருந்தை விற்பனை செய்ததாக கூறப்படும் 3 மருந்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 குற்றவாளிகளுக்கும் நீதிபதி முன்னிலையில் விரைவில் அடையாள அணிவகுப்பு விரைவில் நடைபெற உள்ளது. அடையாள அணிவகுப்புக்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துவருகின்றனர்