சிறுத்தையின் கண்கள்' என்பதை 'சீதாவின் கண்கள்' ஆக்கியதா நீட் கேள்வித் தாள்?
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாளில் ஒரு கேள்வியில் 'சிறுத்தையின் கண்கள்' என்று குறிப்பிடுவதற்குப் பதில் 'சீதாவின் கண்கள்' என அச்சிடப்பட்டு இருந்ததாக கூறுகிறார் ஒரு மாணவர். நீட் தமிழ் கேள்வித் தாளில் இருந்த பல குளறுபடிகளுக்கு இது ஒரு உதாரணம்.
இத்தகைய குளறுபடிகளால் மதிப்பெண் குறைந்து தங்கள் கனவு நிறைவேறுமா நிறைவேறாதா என்ற நிச்சயமற்ற நிலையில், பதற்றத்தில் இருக்கும் மாணவர்கள் பலர். அத்தகைய மாணவர்களில் ஒருவர்தான் பொருள் செல்வன்.
''சிவகாசியில இருக்கிற எங்க தருகணி கிராமத்துக்கு போற ஒவ்வொரு முறையும், இங்கவந்து ஒரு ஆஸ்பத்திரி கட்டி, மருத்துவரா இருக்கனும்னு எனக்கு ஆசை. அந்த ஆசை கொஞ்ச நாள்ல லட்சியமா மாறுச்சு. ஆனா இப்போ அது நடக்குமான்னு பயமா இருக்கு''- தமிழ் வழியில் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய சென்னை மாணவன்(18) பொருள்செல்வன் உறுதி குலைந்த குரலில் பேசுகிறார்.
சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பொருள்செல்வனின் தந்தை சுசேந்திரன் சலூன் கடை நடத்துகிறார், தாய் சித்ராதேவி சத்துணவு ஊழியராகப் பணிசெய்கிறார். பொருள்செல்வனின் தம்பியும், தங்கையும் கூட இவரை 'மருத்துவர்' செல்வனாகவே பார்க்கவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
சிவகங்கையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த குடும்பம் என்றாலும், கிராமங்களில் மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதை தருகணியில் ஏழாம் வகுப்பு படித்தபோது அறிந்துகொண்டதாகவும், அதுமுதல் மருத்துவராகி தனது கிராமத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற லட்சியம் தனக்கு பிறந்ததாகவும் கூறுகிறார் இந்த மாணவர்.
சமீபத்தில், நீட் தேர்வில் தமிழ் கேள்வித்தாளில் உள்ள 49 கேள்விகளில் மொழி பெயர்ப்புப் பிழைகள் இருந்ததால், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை சிபிஎஸ்இ வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளதால், பொருள்செல்வன் போன்ற பல மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணோடு, நேர்மையாக தங்களுக்கு வழங்கப்படவேண்டிய மதிப்பெண்களை சிபிஎஸ்இ வழங்கினால், அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக கூறுகிறார்கள்.
நீட் நுழைவுத்தேர்வை தமிழ்வழியில் எழுதிய சுமார் 24,000 மாணவர்களில் ஒருவரான பொருள்செல்வன், நீட் தேர்வு அறிவிப்பு வந்ததில் இருந்து பதற்றத்தோடு தேர்வுக்கு தயாரானதாகவும், பயிற்சி வகுப்புக்கு செல்லும்அளவுக்கு குடும்பச்சூழல் இல்லை என்பதால் தானாக படித்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.
''கேள்வித் தாளில் இருந்த மொழிமாற்றப் பிழைகளை, தவறு என்று தெரிந்துகொள்வதற்குள் அரைமணிநேரம் கடந்துவிட்டது. தேர்வு எழுதுவதற்கு முன்பாக, அனைத்துக் கேள்விகளையும் ஒரு முறை படித்துவிட்டு எழுதினேன். சிறுத்தையின் கண்கள் என்பதற்கு பதிலாக 'சீதாவின் கண்கள்' என்று கேள்வி அமைந்திருந்தது. எனக்கு ஒருபக்கம் உண்மையில் சீதா என்ற விலங்கு உள்ளது, அதைப்பற்றி நான்தான் தெரிந்துகொள்ளவில்லை என்று தோன்றியது. அதேபோல வௌவால் என்பதற்கு பதிலாக 'வவனவால்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் ஒரு விலங்காக இருக்கும் என்று நினைத்தேன்,'' என கேள்வித்தாளில் இருந்த பிழைகள் குறித்து பேசினார் பொருள்செல்வன்.
செல்வனின் வகுப்பில் மருத்துவக் கனவுடன் இருந்த 30 மாணவர்களில், வெறும் நான்கு நபர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுதியுள்ளார்கள்.