சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று மருத்துவர் சிவக்குமாரின் வாக்குமூலத்திலும் முரண்பாடு இருப்பதால் உச்சகட்ட குழப்பத்தால் ஆணையம் திணறி வருகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இரவு நான் பணியில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே, உடனடியாக போயஸ்கார்டனுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உடனடியாக அங்கு சென்றேன். என்னுடன் மருத்துவர் சினேகாஸ்ரீ, ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் உடன் வந்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 4 நிமிடத்துக்குள் போயஸ்கார்டன் சென்றேன். மருத்துவர், ஆண் செவிலியரும் ஜெயலலிதா இருந்த அறைக்கு சென்றனர். இதன்பின்பு வெளியே வந்த ஆண் செவிலியர், ஸ்ட்ரெச்சரை எடுத்துவரும்படி கூறினார். அதன்படி நான், ஸ்ட்ரெச்சருடன் உள்ளே சென்றேன். அப்போது ஜெயலலிதா கண்களை மூடியநிலையில் ஷோபாவில் அமர்ந்து இருந்தார். நானும், ஆண் செவிலியரும் ஜெயலலிதாவை ஷோபாவில் இருந்து தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்தோம்.
சுமார் 15 நிமிடங்களில் மாடியில் இருந்து ஜெயலலிதாவை படிக்கட்டு வழியாக கீழே இறக்கி ஆம்புலன்சில் ஏற்றினோம். ஆம்புலன்சுக்குள் சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் ஆகியோர் இருந்தனர். நான் ஜெயலலிதா இருந்த அறைக்குள் செல்வதற்கு முன்பு அவருக்கு முதல் உதவி செய்தார்களா? என்பது எனக்கு தெரியாது.
இரவு 10.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றடைந்தேன். ஜெயலலிதாவை வேனில் ஏற்றும் வரையிலும், வேனில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் வரையிலும் அவர் கண்களை மூடியபடி தான் இருந்தார். ஜெயலலிதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துக்கொண்டு அவரது வீட்டு படிக்கட்டில் செல்லும்போது மருத்துவர் சிவக்குமார் ஜெயலலிதாவிடம், ‘மருத்துவமனைக்கு போகிறோம்’ என சொல்ல அதற்கு ஜெயலலிதா தலையை மட்டும் அசைத்தார்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
சசிகலா தனது வாக்குமூலத்தில், ‘2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அன்று போயஸ்கார்டனில் மயக்கநிலையில் ஜெயலலிதா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். ஆம்புலன்சில் சென்றபோது கண்ணை விழித்த ஜெயலலிதா எங்கே செல்கிறோம் என்று என்னிடம் கேட்டார்’ என்று கூறி உள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமார், ஜெயலலிதா கண்களை மூடியபடி ஷோபாவில் அமர்ந்து இருந்தார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள ஜெயலலிதா கார் டிரைவர் கண்ணன், ஆம்புலன்ஸ் வேனில் இருந்த மருத்துவர் சினேகாஸ்ரீ ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா மயக்கநிலையில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்’ என்று கூறியிருந்தனர்.
அதேபோன்று ஆம்புலன்ஸ் வேனுக்குள், சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் இருந்ததாக டிரைவர் சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் சசிகலா, சிவக்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் ஆம்புலன்ஸ் வேனுக்குள் அவர்கள் இருவர் மட்டும் இருந்ததாக கூறி உள்ளனர்.
போயஸ்கார்டனில் நடந்தது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் அளித்திருப்பது ஆணையத்துக்கு உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக ஏற்கனவே ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது அவர் ஆஜராகவில்லை. கடிதம் மூலம் தனது விளக்கத்தை அளித்திருந்தார். இந்தநிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. நேற்றும் அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.
குருமூர்த்தி அந்த மனுவில் ‘என்னிடம் விசாரணை நடத்த தேவையில்லை. எனக்கும், ஜெயலலிதா மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று ஆணையம் எனது தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொள்ளலாம். எனவே, ஆணையத்தில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். எனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும்’ என்று கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆணையம் 20-ந் தேதி(நாளை) தள்ளிவைத்துள்ளது.