சென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7-ம் வகுப்பு படிக்கிறார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவியின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி, குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மிரட்டி தங்கள் ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். இதுதவிர குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களும் சிறுமியை சீரழித்துள்ளனர்.
ஏழு மாத காலமாக நீடித்த இந்த கொடுமை சமீபத்தில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கினர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும், அவர் பல நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்திய போலீசார் 17 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.