SuperTopAds

பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள்!

ஆசிரியர் - Admin
பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள்!

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மாற்றம் ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டமைப்போம் இலங்கையராக ஒன்றிணைவோம் என கவர்ச்சிகரமாக பன்மைத்துவ இலங்கை தேசியவாதம் பேசி முற்போக்கு இடதுசாரி சிந்தனை தத்துவ ஆட்சி கட்டமைப்பு என வெற்றுக் கோசத்தையும், போலி முக மூடியையும், அணிந்து கொண்டு ஜே.வி.பி தனது இனவாத கோர முகத்தை தேசிய மக்கள் சக்தி எனும் கவசத்திற்குள் திரையிட்டு மறைக்க முனைகிறது.

இலங்கையில் பௌத்த தேசியவாத இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்ததில் பெரும் பங்கு ஜே.வி.பி க்கு உண்டு. 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கைக்கு எதிராக இனவாத கோஷத்தை முன் வைத்து குழப்பியதில் இன்றைய ஜனாதிபதிக்கும் பெரும் பங்கு உண்டு. அவர்கள் ஒன்றும் மீட்பர்கள் அல்ல பல மீட்பர்களை நாம் பார்த்து விட்டோம்.

ஒரு மாதத்திலேயே ஆட்சி கலகலத்து போய்விட்டது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

தேர்தல் காலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதி க்குரிய பெயர் விபரங்களை வெளியிடுவதாக கூறினார்கள். வெற்றி பெற்றதும் உடனடியாக இரத்து செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஒரு சிலருடைய பெயரை மட்டுமே வெளியிட்டவுடன் அமைதியாகிவிட்டனர்.

தூய வாதம் பேசியவர்கள் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவில் இவர்களின் போலி ஊழல் ஒழிப்பு வாதம் என்பதற்கு இதுவே, பெரும் சாட்சி. எனவே, தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள் என சொல்பவர்கள் தமது சுயநலத்திற்காக மாற்றம் எனும் கோஷத்தை முன்னிறுத்துகின்றன. அவர்களால் தமிழினத்திற்கு எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதது போல் எண்ணற்ற கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் களத்தில் உள்ளன.

வெளிநாட்டு பண முகவர்களும் புலம்பெயர்ந்த தேசத்தவர்களும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது.

இன்றைய தமிழ்த்தேசிய கட்சிகளும் அதில் உள்ள நபர்களும் சோரம் போகலாம். ஆனால் தமிழ்த் தேசியம் எனும் உயரிய இலக்கில் இருந்து நாம் ஒவ்வொரு சாதாரண குடிமகனும் உள்ளத்தால் கூட மாற்றி சிந்திக்க முடியாது.

இன விடுதலை அரசியலுக்காக நாம் இழந்தவை அதிகம் இன்னும் இழப்பவை அதிகமாக இருந்தாலும் நாம் தமிழ்த் தேசியத்தை கடந்து கடுகளவும் நகர முடியாது. அது வரலாற்றுத் தவறாக மாறிவிடும் கடந்த காலத்தில் வினைத்திறனற்ற செயல்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நிராகரியுங்கள்.

பணத்திற்கு, பதவிக்கோ, சலுகைக்கோ, சமயத்திற்கோ, சாதியத்திற்கு, சாராயத்திற்கோ, அபிவிருத்திக்கோ வாக்களிக்க முயலாதீர்கள். நான் ஏன் எதற்கு உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? எனும் கேள்வியை ஒவ்வொரு வாக்காளனும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை யார் ஆள வேண்டும் எனும் உரிமையை அற்ப நபர்களுக்கு விற்று விடாதீர்கள். நாங்கள் நாங்களாகவே இருப்போம். எதற்காகவும் தமிழ்த் தேசியத்தை நிராகரிக்க முனையாதீர்கள். உங்கள் வாக்கு தடம் மாறாத இருப்பை தன தாக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்காக இருக்கட்டும்.

எமக்குள் உள்ள உள் பகையினை நாமே தீர்த்துக் கொள்ளலாம். எதிரிக்கு எந்த வாய்ப்பும் வழங்கி விடாதீர்கள் தேசம் பறி போய் விட்டது. தேசியத்தையாவது எம தாக்கிக் கொள்வதற்காக தேசிய உணர்வோடு வாக்களியுங்கள். அதுவே நாம் இந்த இனத்திற்கும் இந்த தேசத்துக்கும் செய்யும் பாரிய அர்ப்பணிப்பும் தியாகமும் ஆகும். என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.