SuperTopAds

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை ரில்வின் சில்வா தீர்மானிக்க முடியாது!

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை ரில்வின் சில்வா தீர்மானிக்க முடியாது!

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை ரில்வின் சில்வா தீர்மானிக்க முடியாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கிருஷ்ணராசா கிருஷ்ணமீனன் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் கரும்பலகைச் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவினரின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதன்போது சுயேட்சை குழுவில் போட்டியிடும் கிருஷ்ணராசா கிருஷ்ணமீனன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய பழைய, முன்னாள் தலைவர்கள் சோரம் போய்விட்டார்கள் என்பதை காரணமாகவைத்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை என்று தீர்மானிப்பதை ஏற்கமுடியாது. அது முற்றிலும் அபத்தமானது.

இளைஞர்கள் தற்போது அரசியல் களத்திற்கு வந்துள்ளோம்.இந்த கருத்தைச் சொன்ன கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் பல்கலைக்கழக பின்னணியில் இருந்து வந்தவர். நாங்களும் பல்கலைகழக பின்னணியில் இருந்து வந்திருக்கின்றோம்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் மக்களுக்கு ஊடாகவே எடுத்துச் செல்வோம். மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களை தீர்மானிப்பார்கள் என ரில்வின் சில்வாவுக்கும் சர்வதேச தரப்புகளுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

எமது மக்களின் மனம்நோகும் வகையிலும் எமது மக்கள் இதற்காக செய்த போராட்டங்களையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் விதத்திலும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என ரில்வின் சில்வா உள்ளிட்ட தென்னிலங்கைத் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம், என்றார்.