மன்னார் வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்!

ஆசிரியர் - Admin
மன்னார் வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும்,கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள்.அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.     

மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் மற்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணத்தை தொடர்ந்து அவரது கணவர் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு உடன் கொண்டு வந்த நிலையில்,பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

வைத்தியசாலை தரப்புடன் உடனடியாக தொடர்பு கொண்டு,குறித்த விடயம் தொடர்பாக அவர்களிடம் வலியுறுத்தி தொடர்ந்தும் விசாரனைகள் சம்மந்தமாகவும் ஒவ்வொரு நாளும் விசாரித்து வருகிறோம்.

உள்ளக ரீதியான வைத்தியசாலையின் விசாரனைகள் நிறைவடைந்துள்ளன.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசாரனைகளும் நிறைவடைந்துள்ளன.வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் விசாரனைகளும் நிறைவடைந்துள்ளன.

கள அறிக்கையும் முடிவடைந்துள்ளன.நான்கு விதமான முதல் கட்ட விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது.அடுத்த கட்டமாக மத்திய சுகாதார அமைச்சினால் இவ்வாரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விசாரனைக்குழு வருகை தந்து முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இடம்பெற்ற நான்கு கட்ட விசாரணைகளின் போது சில நபர்கள் குற்றவாளிகளாக, குற்றம் சாட்டப்பட்ட கூடியவர்களாக சம்பவ தினத்தன்று கடமையில் இருந்தவர்கள் அசட்டை யினமாக நடந்து கொண்டுள்ளார்கள் என சிலரை அடையாளமிட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இரு வேறு தரப்பாக வைத்தியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சும், ஏனையவர்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சுக்கும் வைத்திய தரப்பினராலும்,ஏனைய விசாரணை தரப்பினராலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே பரிந்துரைக்கப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.நோய் வாய் பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்கு வரவில்லை.

சாதாரண ஒரு விடயத்தை கூட அவர்களின் கவனயீனமான செயல்பாடு ஒரு மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.15 நாட்களை கொண்ட பிள்ளையின் தாய் மரணிப்பது என்பது பிறந்த பிள்ளையின் எதிர் காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

எனவே வைத்தியத்துறை இவ்வாறான மோசமான நிலைப்பாட்டிற்கு தார்மிக பொறுப்பேற்க வேண்டும்.எனவே தொடர்ச்சியாக சாட்டுப்போக்கு பதில்களை கூறி எடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைக்கு அமைவாக செயல்படாமல் விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களில் கூட மருத்துவத்துறைக்கு எதிராக தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கிளிநொச்சியில் பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட விசாரணை அப்படியே காணாமல் போய் விட்டது.யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரின் கை அகற்றப்பட்ட மை தொடர்பான விவகாரம் பேசு பொருள் அற்று போய்விட்டது.வவுனியா விவகாரமும் காணாமல் போய் விட்டது.

கிளிநொச்சியில் கொரோனா வைத்தியசாலையில் பல லட்சம் ரூபாய் ஊழல் என நிரூபிக்கப்பட்டு பெயர் குறிப்பிட்ட நபர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என விசாரணை குழு நியமிக்கப்பட்ட போதும் இன்று வரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.குற்றம் சாட்டிய நபரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்தனர்.

மன்னார் வைத்தியசாலையிலும் கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

அதற்கு எதிராக நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து குறிப்பிட்ட காலங்களில் இவ்வாறான ஒரு சம்பவங்கள் இடம் பெறாத வகையில் தடுத் திருந்தோம்.எனினும் அவர்களின் கவனயீனமான செயல்பாடுகள் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.தற்போது வைத்தியசாலையில் 61 வைத்தியர்கள் உள்ளனர்.

56 வைத்தியர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.5 வைத்தியர்களே மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர்.

எனவே நீங்கள் மீண்டும் மன்னாரிற்கு வந்து மன்னார் மாவட்டத்தில் குறைந்த வருடங்களாவது கடமையாற்ற வேண்டும்.அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

மன்னார் மாவட்ட வைத்தியர்கள் மன்னாரிற்கு பணிக்காக வருகிறது இல்லை.அதன் விளைவாக வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணி செய்கின்ற நிலை உள்ளது.எனவே இந்த நிலையை மன்னார் வைத்தியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.விசாரணை முழுமை பெற சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.விசாரணை நிறைவடைந்து வைத்தியசாலை தரப்பினராலும்,மத்திய சுகாதார அமைச்சினாலும் எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது என்பதற்காக நாங்கள் சில நாட்கள் காத்திருக்கின்றோம்.

குறித்த பெண்ணின் உடற்கூறு அறிக்கை இன்னும் வரவில்லை. குறித்த அறிக்கையும் இவ் வாரம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையும் வெளிவந்த பின்னர் 3 அல்லது 4 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவதற்கான வழி ஏற்படுத்த வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீட்டையும் குறித்த குழந்தையின் எதிர்காலத்திற்கான வழி வகையையும் ஏற்படுத்த வேண்டும்.

அவர்கள் நஷ்ட ஈட்டையும் வழங்க முன்வர வேண்டும்.பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும்,கிடைக்க வேண்டும்.வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள்.அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு